ஆதிதிராவிட மாணவர் விடுதி பணியாளர்களின் விளக்கக் கடிதத்தை பெற விருதுநகர் தனி வட்டாட்சியர் மறுப்பு

ஆதிதிராவிடர் நலத் துறையில் முறைகேடாகப் பணி நியமனம் பெற்றதாக 85 பேரிடம், ஆட்சியர் விளக்கம் கேட்டு அனுப்பியிருந்த நோட்டீஸுக்கு

ஆதிதிராவிடர் நலத் துறையில் முறைகேடாகப் பணி நியமனம் பெற்றதாக 85 பேரிடம், ஆட்சியர் விளக்கம் கேட்டு அனுப்பியிருந்த நோட்டீஸுக்கு , பாதிக்கப்பட்ட சிலர் அளித்த விளக்கக் கடிதத்தை வட்டாட்சியர் வெள்ளிக்கிழமை வாங்க மறுத்ததால், விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
        விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி விடுதிகளில் கடந்த 2015- 2016 இல் காலியாக இருந்த 85 துப்புரவு, சமையலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
     இந்நிலையில், பணி நியமனம் பெற்ற 85 பேருக்கும் தற்போதைய ஆட்சியர் அ. சிவஞானம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தன்னிச்சையாக உங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். தலைவர், உறுப்பினர் ஒப்புதல் பெறவில்லை. மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது பணி நியமணங்கள் வழங்கப்பட்டுள்ளன.     இந்த நியமன ஆணைகளை தொடர அனுமதிக்க முடியாது. அதனால், தற்போது பணிபுரியும் உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக் கூடாது. இதற்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
     இதற்கு விளக்கம் அளிப்பதற்காக பாதிக்கப்பட்ட சிலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் தனி வட்டாட்சியர் நாகேஸ்வரியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்திருந்தனர். ஆனால், வட்டாட்சியர் மனுவை வாங்க மறுத்ததால், அலுவலக வாசலில் அவர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். இதனால், வேறு வழியின்றி அஞ்சல் மூலம் பதில் மனுவை சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைத்தனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள விடுதிகளில் பணிபுரியும்  பணியாளர்கள் 12 பேருக்கு விளக்கம் கேட்டு வந்த நோட்டீஸுக்கு, பதிலளிப்பதற்காக வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். விளக்கக் கடிதங்களை கொடுக்கச் சென்றபோது, தனி வட்டாட்சியர் இல்லை. எனவே, அவருக்கு கீழ் உள்ள அலுவலரிடம் விளக்கக் கடிதம் கொடுத்தபோது, அதை வாங்க முடியாது என அலுவலர் மறுத்து அனுப்பிவிட்டாராம்.      எனவே, பணியாளர்கள் அலுவலகத்துக்கு வெளியே விளக்கக் கடிதத்தை வாங்க மறுத்த தனி வட்டாட்சியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதையடுத்து, விளக்கக் கடிதத்தை பதிவு தபால் மூலம் உரிய அலுவலருக்கு அனுப்புவது என்றும், அதன் நகலை சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com