சிவகாசியில் மழைநீர் வாய்க்கால்களை சீரமைக்க கோரிக்கை

சிவகாசியில் மழைநீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் மழைநீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     சிவகாசி நகராட்சிப் பகுதியில் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள வங்கியிலிருந்து விளாம்பட்டி சாலை தொடங்குகிறது.இச்சாலையில் கல்மண்டபம் வரை நகராட்சி எல்லைப் பகுதியாகும். சுமார்1 கி.மீ. தொலைவு உள்ள இச்சாலையில், 15 ஆண்டுகளுக்கு முன் மழைநீர் வாய்க்கால் கட்டப்பட்டது.
     இந்த வாய்க்காலை ஓட்டி லாரிகள், வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாய்க்கால் சுவர் பல இடங்களில் சேதமடைந்து வருகிறது. மேலும், கட்டட கழிவு கள் வாய்க்காலில் கொட்டப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாய்க்கால் முற்றிலும் அடைக்கப்பட்டு விட்டது. பிற பகுதியில் வாய்க்கால் முழுவதும் மண் அடைத்துள்ளது. வாய்க்காலின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. 
     மேலும், இந்த மழைநீர் வாய்க்கால் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைக் காலங்களில் கழிவுநீர் பொங்கி  சாலை வழியே ஓடி, சாலையும் சேதமடைகிறது.
     சிவகாசி பேருந்து நிலையம் பின்புறம் காந்தி சாலை உள்ளது. இந்த சாலையிலும் இரு புறமும் உள்ள மழைநீர் வாய்க்காலில் அப்பகுதியில் தேநீர் கடை வைத்திருப்போரும், மற்ற கடைக்காரர்களும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
    பல இடங்களில் கடைக்காரர்கள் பழைய டயர் உள்ளிட்டவைகளைப் போட்டு வைக்கும் இடமாக வாய்க்காலை பயன்படுத்துகின்றனர். 
     தெய்வானை நகர் பகுதியில் உள்ள மழைநீர் செல்லும் வாய்க்கால் மீது லாரி இயக்கப்படுவதால், வாய்க்கால் முற்றிலும் சேதமடைந்து தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை.
   வெம்பக்கோட்டை சாலையில் பள்ளியின் பின்புறம் சாலையில் ஒரு புறம் மட்டுமே மழைநீர் செல்லும் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் சாலையில் அதிக அளவு தண்ணீர் தேங்குகிறது.
   என்.ஆர்.கே.ஆர். வீதியில் உள்ள கடைக்காரர்கள் மழைநீர் செல்லும் வாய்க்காலை முற்றிலும் ஆக்கிரமித்து, வாய்க்காலை சிமென்ட் போட்டு மூடிவிட்டனர். 
இதனால், லேசான மழை பெய்தாலும் அப்பகுதியில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி விடுகிறது.
   எனவே, நகராட்சி நிர்வாகம் மழைநீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com