விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

விருதுநகரில் காமராஜர் 115-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது வீட்டில் உள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகரில் காமராஜர் 115-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது வீட்டில் உள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் மாலை அணிவித்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் வீடு விருதுநகரில் உள்ளது. அவரது, 115-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவர் வாழ்ந்த வீட்டில் அவர் பயன்படுத்திய ஆடை, பேனா போன்ற பொருள்கள் மற்றும் அரிய புகைப்படங்களை பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும், கல்வி வளர்ச்சியை குறிப்பிடும் வகையில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவரது வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து மரியாதை செலுத்தினர். அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகள் காமராஜர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும், அவரது வீட்டு முன்பு பெண்கள் ராட்டையில் நூல் சுற்றினர்.
ராஜபாளையத்தில்..: காமராஜர் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முகவூரில் காமராஜர் சிலைக்கு எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற ரத்த தான முகாமையும் அன்னதான விழாவையும் எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய அவைத் தலைவர் மிசா நடராஜன், ஊராட்சி செயலாளர் ராஜகோபால் நாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவை எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல் ஏ தொடங்கி வைத்தார். உடன் மருத்துவர் கருணாகரப்பிரபு , பேரூர் செயலாளர் இளங்கோவன் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கும் எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் நகரச்செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்தநாள்விழா கல்வி வளர்ச்சிநாள் விழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டது.பள்ளி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மறியாதை செலுத்தினர்.
சாத்தூரில்..:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்,காமராஜரின் 115-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. படந்தால்,முக்குராந்தல், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாவில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் எல்.பி.எல்.பாண்டியன் தலைமை வகித்தார்.மேற்கு ஒன்றியச் செயலாளர் அனல்ரமேஷ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர துணைத் தலைவர் ஜோதிநிவாஸ்,மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுஇப்ராஹிம் ஆகியோர் காமராஜர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். படந்தால்,முக்குராந்தல் ஆகிய பகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து,பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் படந்தால்,முக்குராந்தல் ஆகிய பகுதிகளில் அன்னதான விழாவை துவக்கி வைத்தனர்.மேலும் சாத்தூர் நகர தலைவர் டி.எஸ்.அய்யப்பன் மற்றும் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் கார்த்திக் ஆகியோர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.இந்த விழாக்களில் தமிழ்மாநில காங்கிரஸ் நகர,ஒன்றிய நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதே போல் சாத்தூர் அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவில் சாத்தூர் சட்டபேரவை உறுப்பினர் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு
எதிர்கோட்டை சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.மேலும் சாத்தூர் ஆயிர வைசிய மேல்நிலைபள்ளி எட்வர்டு மேல்நிலைபள்ளி,எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைபள்ளி, ராதாகிருஷ்ணன் மேல்நிலைபள்ளியிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. மேலும் பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இதில் பள்ளி மாணவ,மாணவிகளும்,பள்ளி தலைமையாசிரியர்களும்,ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
சிவகாசியில்..:சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு அக்கட்சியின் நகரத் தலைவர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிவகாசி முன்னாள் நகர் மன்றத்தலைவர் ஏ.ஞானசேகரன், பட்டதாரி பிரிவு நிர்வாகி மைக்கேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சிவகாசி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் நகரத் தலைவர் நாகலிங்கம் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்து. இதில் மாவட்ட துணைத்தலைவர் என்.எஸ்.தங்கராஜ், வர்த்தக பிரிவு தலைர் பழனிச்சாமி, நகர துணைத்தலைவர் ஜி.ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜர் உருவச்சிலைக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.வி.கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இதில் கட்சியின் நகரத்தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com