தேங்காய்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர்

கேரளத்தைப் போன்று, தமிழகத்திலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் என, தமிழ்நாடு

கேரளத்தைப் போன்று, தமிழகத்திலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் பி. சண்முகம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் விருதுநகரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடையே மேலும் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. நாட்டிலேயே அதிக அளவில் (34 சதவீதம்) தென்னை விவசாயம் தமிழகத்தில்தான் உள்ளது. ஆனால், தமிழகத்தில் தேங்காய்க்கு நிரந்தரமான விலை இல்லை.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, 50 லட்சம் தென்னை மரங்கள் கருகிவிட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தென்னை உள்ளது. ஆனால், தமிழகத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை.
 கேரளத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் கிலோ ரூ. 41-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மிகக் குறைந்த விலையில் தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்.
தற்போது, கொப்பரை தேங்காய்க்கு கிலோ ரூ. 65 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.102 தர வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
சொட்டு நீர்ப் பாசனத்துக்கு அரசு 100 சதவீதம் மானியம் வழங்குகிறது. அதற்கு, அரசு அலுவலர்கள் சில நிறுவனங்களில் மட்டுமே அதற்குரிய கருவிகளை வாங்க வேண்டும் என விவசாயிகளை வலியுறுத்துகின்றனர். ஆனால், அந்நிறுவனப் பொருள்கள் தரமற்றதாக போலியாக உள்ளன. எனவே, விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்கி, இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து, டிசம்பர் மாதத்தில் வேளாண் துறை அமைச்சர் மற்றும் அத்துறை உயர் அலுவலர்களிடம் பேச உள்ளோம். அப்போது கோரிக்கை நிறைவேறாவிட்டால், தைப் பொங்கலுக்கு பின்னர் போராட்டம் நடத்த உள்ளோம்.
பருவமழையால்,  சென்னை,  நாகபட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்துவிட்டன. இதனால், விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. அதேநேரம், தமிழக அமைச்சர் இந்த ஆண்டு பருவ மழையால் பயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லையென அறிவித்தது கண்டிக்கத்தக்கது.
இதுவரை, பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள்  நியமிக்கப்படவில்லை.  எனவே, பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, மழையால் சேதமடைந்த பயிர்கள், குடிசைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் அ. விஜயமுருகன், மாவட்டச் செயலர் வி. முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, விருதுநகரில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாநில துணைத் தலைவர் ஆர். மதுசூதனன் தலைமை வகித்தார். அதில், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com