விருதுநகரில் புத்தகத் திருவிழா

விருதுநகர் வாசகர்கள் பயன்பெறும் வகையில், திங்கள்கிழமை இரவு புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டது.

விருதுநகர் வாசகர்கள் பயன்பெறும் வகையில், திங்கள்கிழமை இரவு புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டது.
      விருதுநகர் உழவர் சந்தை அருகே லட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் தொடங்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழா கண்காட்சியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் திங்கள்கிழமை இரவு தொடக்கி வைத்தார்.                
செந்திக்குமார நாடார் கல்லூரி, மக்கள் வாசிப்பு இயக்கம் இணைந்து நடத்தும் இப்புத்தகத் திருவிழாவில், பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த 30 அரங்குகளில் பல்லாயிரக்கணக்கான அறிவு சார்ந்த புத்தகங்கள் வாசகர்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, ஜனாதிபதி விருது, பாலர் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கொ.மா. கோதண்டம் கலந்துகொண்டு புத்தகத்தின்  பயன்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். இப்புத்தகத் திருவிழா நவம்பர் 13 இல் தொடங்கி 21 ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. மேலும், காலை 10 முதல் மதியம் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, நாவல் எழுதும் பயிற்சி, பேச்சாளர் ஆவதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பிரபலமான எழுத்தாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இதை, பெற்றோர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல், தினமும் மாலை 5 மணிக்கு எழுத்தாளர் சந்திப்பு, இலக்கிய உரை, கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளன. மேலும், குழந்தைகளின் கற்பனை ஆற்றலை மேம்படுத்த கதை சொல்லும் நிகழ்வும் நடைபெறுகிறது. தொடர்ந்து, உலக சாதனை புத்தகத்தில் வாசகர்களது படைப்புகளும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பக்கத்தில் உருவாக உள்ள சாதனை புத்தகத்தில் இளம் படைப்பாளர்கள் எது குறித்தும் எழுதலாம். எதிர்கால நாட்டை வடிவமைக்கும் நல்ல படைப்புக்கு விருது வழங்கப்பட உள்ளது.  
இங்கு வாங்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு சலுகை தரப்படும். எனவே, வாசகர்கள் குழந்தைகளுடன் வந்து புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என,  மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனர் வீரபாலன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com