நெல் விலை சரிவு, வைக்கோலுக்கும் விலை இல்லை: ராஜபாளையம் விவசாயிகள் கவலை

ராஜபாளையம் சேத்தூர் பகுதியில் நெல் அறுவடை இறுதிக் கட்டத்தில் நடந்துவரும் நிலையில் நெல் விலை சரிவால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ராஜபாளையம் சேத்தூர் பகுதியில் நெல் அறுவடை இறுதிக் கட்டத்தில் நடந்துவரும் நிலையில் நெல் விலை சரிவால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    இப்பகுதியில் பெய்த மழையால் விளைந்த நெல் கதிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் அறுவடைசெய்ய விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்குள்ளாகின்றனர். வயலில் அதிக ஈரப்பதம் இருப்பதால் டயர் வண்டிகளை வைத்து நெல் அறுவடை செய்யமுடியாமல் பெல்ட் அறுவடை வண்டிகளை பயன்படுத்தி அறுக்கின்றனர்.
     இந்த வண்டிக்கு மணிக்கு கூலிரூ. 2500 ஆகிறது. டயர் வண்டிக்கு ரூ.1400 தான் ஒரு மணி நேரக் கூலி. அறுவடைக்கு கூடுதல் செலவுசெய்து அறுத்து களத்துக்கு நெல்லை கொண்டுவந்து சேர்த்தால் வியபாரிகள் மழையில் நனைந்த நெல் கலர் பழுப்படைந்து இருப்பதாகக் கூறி வாங்க மறுக்கின்றனராம். 
நெல் விலை வெகுவாகக் குறைந்துவிட்டது. 72 கிலோ ஒரு மூடை நெல் கடந்த மாதம்  ரூ. 1400-க்கு விற்றது. தற்போது ரூ. ஆயிரமாக  குறைந்துவிட்டது. இதனால் அறுவடைசெய்த நெல்லை கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று அரசு நெல் கொள்முதல் மையங்களுக்கு விவசாயிகள் அதிகம் கொண்டுவருகின்றனர். 
  ராஜபாளையம் அருகே, சேத்தூரில் சில வாரங்களுக்கு முன் அரசு நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இந்த கொள்முதல் மையங்களில் 100 கிலோ நெல்  ரூ. 1,660-க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கி, 15 நாள்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்துகின்றனர்.இங்கு விவசாயிகள் நெல்லை இயந்திரம் மூலம் தூசுகளை சுத்தம் 
செய்தே எடைபோட்டு தரவேண்டும். இதனால் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    தற்போது அறுவடை முடியும் நேரத்தில்  சேத்தூர் தேவதானம் கொள்முதல் மையத்திற்கு அதிகம் நெல் வருகிறது. தனிநபர் நெல் வியபாரிகள் விவசாயிகளிடம் மிக குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி இரு மாதங்கள் கழித்து பணம் தருவதால் விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு அறுவடை செய்த நெல்லை  கொண்டுவந்து விற்றுவருகின்றனர். தற்போது இப்பகுதியில் 90சத நெல் அறுவடைசெய்யப்பட்டநிலையில் இன்னும் சில நாள்களில் அறுவடை முடிந்துவிடும். 
 இந்த நிலையில் கடந்த மாதம் வரை அறுவடை செய்த வைக்கோல் ஏக்கருக்கு ரூ 5000 முதல் ரூ.6500 வரை விலைபோனது. தற்போது பெல்ட் வண்டியில் நெல் அறுவடை செய்யும்போது வைக்கோல் நசுங்கி விடுவதால் வைக்கோலை வியபாரிகள் வாங்குவதில்லை. இதை விவசாயிகள் வயலுக்கு உரமாக்கிவிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com