குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை காவல் நிலையங்களில் வழக்குப் பதிய வேண்டும்: போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என

குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போலீஸாருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
      மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி, காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் நடைபெற்றது.  இதில், அவர் பேசியதாவது:
      விருதுநகர் மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் வகையில், காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அது குறித்த சட்டங்களை நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். 
     பொதுவாக, குழந்தைகள் மனதளவில் மிகவும் மென்மையானவர்கள். பெற்றோர் மற்றும் சமூகத்தால் குழந்தைகளுக்கு எந்த நிலையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில், அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும் வழங்கவேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, இளைஞர் நீதி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
   இச்சட்டத்தின்படி, பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்டத்துக்கு முரணான குழந்தைகளை கையாளும்போது, குழந்தைநேய முறையில் போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும். சட்டத்துடன் முரண்படும் குழந்தைகளை காவல் நிலையங்களிலோ, சிறையிலோ வைக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்தால், அவர்களது பெற்றோர், நன்னடத்தை அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும், குழந்தைகள் தொடர்பான வழக்குகளை நான்கு மாதத்துக்குள் விரைந்து முடிக்கவேண்டும்.
    அதேபோல், குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறைகள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கும்போது, எவ்வித பாரபட்சமுமின்றி "போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும்.
    தற்போது, போதை பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் போதை, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
    இதைத் தொடர்ந்து, இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்  குறித்து குழந்தைகள் உளவியலாளர் எஸ். ராமநாதன் விளக்கினார்.
    இக்கூட்டத்தில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், மாவட்டக் குற்றப் பதிவேட்டு கூட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயராம், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் பிரிவு காவல் சார்பு-ஆய்வாளர் நாகராஜ் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com