விருதுநகர் பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் மாணவர் காயம்: பெற்றோர் முற்றுகை

விருதுநகரில் தனியார் உதவிபெறும் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை, ஆசிரியை செவ்வாய்க்கிழமை பிரம்பால் அடித்ததால்

விருதுநகரில் தனியார் உதவிபெறும் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை, ஆசிரியை செவ்வாய்க்கிழமை பிரம்பால் அடித்ததால் காயம் ஏற்பட்டது. இதைக் கண்டித்து, மாணவரது பெற்றோர் பள்ளி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
     விருதுநகர் துப்புரவுப் பணியாளர் காலனியை சேர்ந்தவர் ராஜூ-காளியம்மாள், துப்புரவுப் பணியாளர்கள். இவர்களது மகன் தங்கவேலு (10), விருதுநகர் நகராட்சி பின்புறமுள்ள சுப்பிரமணிய வித்யாலய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
     இந்நிலையில், மாணவர் தங்கவேலு கணக்கு பாடத்தில் எழுந்த சந்தேகம் குறித்து ஆசிரியை கலைராணியிடம் விளக்கம் கேட்டாராம். ஆசிரியை விளக்கமளித்தும் மாணவருக்குப் புரியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை கலைராணி, மாணவரை பிரம்பால் அடித்துள்ளார். அதில், அவரது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
      இது குறித்து பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதையடுத்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரம்பால் தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினர்.
     தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு போலீஸார், மாணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com