மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுகுடல் புற்றுநோய் கட்டி அகற்றம்

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறுகுடல் புற்றுநோய்க் கட்டி 6 மணிநேர அறுவைச்  சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டது.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறுகுடல் புற்றுநோய்க் கட்டி 6 மணிநேர அறுவைச்  சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டது.
நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், பட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (50). 6 மாதங்களாக வயிற்று வலியால்  அவதிப்பட்டு வந்த இவர், மஞ்சள் காமாலை அறிகுறி இருந்ததால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது, முன் சிறுகுடலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த செப். 21-ஆம் தேதி மருத்துவர்கள்  ராஜசேகரன், சகாய இன்பசேகர், டேனியல், மயக்க மருந்து நிபுணர் அனீஸ், நோய்க் குறியியல் துறைத் தலைவர் வெற்றிவீரன் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சையின்போது 5.4 செ.மீ அளவிலான புற்றுநோய்க் கட்டி முன்சிறுகுடலில் இருப்பதும், புற்றுநோயானது பெருங்குடலிலும், கணையத்தைச் சுற்றியுள்ள நிணநீர் கட்டிகளிலும் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புற்றுநோய்ப் பகுதி, பெருங்குடலின் பகுதி, பித்தநீர்பை, இரைப்பையின் சிறுபகுதி ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
துண்டிக்கப்பட்ட பித்த நீர் குழாயும், மீதமுள்ள இரைப்பை பகுதியும் சிறுகுடலுடன் இணைக்கப்பட்டன. புற்றுநோய் இல்லாமல் இயல்பாக உள்ள பெருங்குடல் பகுதியும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. முன் சிறுகுடல் பகுதி அகற்றப்பட்டு விட்டதால் கணையத்திலிருந்து உற்பத்தி ஆகும் சுரப்புநீர் உணவுப் பாதையை சென்றடைவதற்காக கணையத்தோடு இரைப்பைக்கு ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை சுமார் 6 மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சையின்போதும், அதன் பின்னுமாக 14 பாட்டில்கள் ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்ட பாலாஜி மருத்துவமனையிலிருந்து வீட்டுக் அனுப்பப்பட்டார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது:
அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட அனைத்து திசுக்களும் நோய்க் குறியியல் துறைக்கு அனுப்பப்பட்டு நோயாளி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் ரூ. 2 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இங்கு இலவசமாக செய்யப்பட்டது. இதற்காக பாடுபட்ட மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு என்றார் மீனாட்சிசுந்தரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com