குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை கைவிட இந்திய கம்யூ. வலியுறுத்தல்

குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் மானியத்தை ரத்து செய்யும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களை முன்னுரிமை,  முன்னுரிமை அல்லாதவர் என வகைப்படுத்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட்டு அனைவரையும் முன்னுரிமை பெற்றவராக அறிவித்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயலை கண்டித்து மக்கள் மத்தியில் நடைபயணமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட 200 குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன.  இக்குழு திருவாரூர் மாவட்டத்தில் செப். 1முதல் 10 வரை கிராம மற்றும் நகர் பகுதி முழுமைக்கும் நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து, 2000 இடங்களில் தெருமுனை கூட்டம் நடத்தி சுமார் 5 லட்சம் பேரை சந்தித்து பிரசாரம் செய்வது.
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட இலவச குடிநீர் வழங்க வேண்டும்,  அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலைக் கடையில் வழங்க வேண்டும்.
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும். வீட்டு மனையில்லாதவர்களுக்கு 8 சென்ட் நிலம் வழங்க வேண்டும்.  புறம்போக்கு இடத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்.  ரூ. 5 லட்சம் மதிப்பில் புதிய வீடுகட்டித்தர வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி நாள் ஊதியம் ரூ.400 வழங்க  வேண்டும்.
விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் இடுபொருளுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.  விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம்,  ஒழுங்காற்று குழுவினை உடனடியாக அமைக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். வணிகமயக் கல்வி கொள்ளையை தடுத்து நிறுத்தி அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும்.  அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் வழங்க வேண்டும்.  மீனவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  ஊழலை ஒழிக்க லோக்பால்,  லோக் ஆயுக்த கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடத்துவது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட நிர்வாகக் குழு  உறுப்பினர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலர் வை. செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கோ. பழனிசாமி, முன்னாள் பேரவை உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம், கே. உலகநாதன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com