இடிந்து விழும் நிலையில் தொடக்கப்பள்ளி

கூத்தாநல்லூர் வட்டம்,  மேலக்கொண்டாழி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், அருகிலுள்ள

கூத்தாநல்லூர் வட்டம்,  மேலக்கொண்டாழி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், அருகிலுள்ள  அம்மன்  கோயிலில் பாட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பள்ளி கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலக்கொண்டாழி  ஊராட்சியில், அனைவருக்கும்  கல்வி  இயக்கம் சார்பில், கடந்த  2002- ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 
இப்பள்ளிக்கு  புதிய கட்டடம் கட்டப்பட்டு, 2005- ஆம்  ஆண்டு, ஆகஸ்ட்  மாதம்  9 -ஆம்  தேதி, அப்போதைய  முதல்வர்  ஜெயலலிதாவால்  திறந்து வைக்கப்பட்டது.  
5-ஆம் வகுப்பு  வரையுள்ள  இப்பள்ளியில், மேலக்கொண்டாழி கிராமத்தைச் சேர்ந்த 26   மாணவ, மாணவியர்  பயின்று வருகின்றனர்.  தலைமையாசிரியை,  உதவி தலைமையாசிரியை என  இரண்டு பேர் மட்டுமே இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாமல் இப்பள்ளி கட்டடம் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே விரிசல் விழுந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி இக்கட்டடத்தில் பாட வகுப்புகள் நடைபெறவில்லை. அருகில் உள்ள அம்மன் கோயில்  வளாகத்தில் பாட வகுப்பு நடத்தப்படுகிறது. 
இதுகுறித்து,  தலைமையாசிரியை  அ. அருள்மேரி விநோலின்  கூறியது:
தொடக்கத்தில்  இப்பள்ளியில் 32  மாணவர்கள்  படித்து வந்தனர். தற்போது  26 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளி கட்டடம் இடிந்து விழக்கூடிய நிலையில் மோசமாக உள்ளது.  ஆண்டுதோறும் கட்டடப் பராமரிப்புக்காக  ரூ. 5 ஆயிரம் கொடுப்பார்கள். அந்தப்  பணத்துடன் , ஆசிரியர்களான  எங்களின்   பணத்தையும்  சேர்த்து, பராமரிப்பு  பணிகளை மேற்கொள்வோம். தற்போது, இடியும்  நிலையில் விரிசல்  உள்ளதால் பராமரிப்பு பணி மேற்கொண்டாலும் பயனில்லை. 
எனவே, கட்டடத்தைப் புதுப்பித்துத் தரும்படி, மன்னார்குடி  யூனியனில் நேரில் சென்று கடிதம் கொடுத்தோம். ஆனால், அவர்கள் இப்பள்ளி கூத்தாநல்லூர் நகராட்சி எல்லையில் இருப்பதால்,  நகராட்சிதான் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளவேண்டும் என
கூறிவிட்டனர்.  
இதுகுறித்து கூத்தாநல்லூர்  நகராட்சி  ஆணையரிடம்  தெரிவித்தால்,  அவர்,  கூத்தாநல்லூர்  நகராட்சிக்குள்பட்டு,  பள்ளிக்கூடம்  கிடையாது என்றும், அந்தப்  பள்ளி ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி  என்றுதான்  உள்ளது என கூறிவிட்டார். இதனால், மீண்டும்,  மன்னார்குடி  யூனியனுக்கு, கூடுதல் தொடக்கக் கல்வி  அலுவலர், உதவி  தொடக்கக் கல்வி  அலுவலர், வட்டார வளமைய  மேற்பார்வையாளர்  உள்ளிட்டோருடன் சென்று முறையிட்டும்  இதுவரை நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. 
இதனால், கிராம மக்கள் அனுமதியோடு, அருகில்  உள்ள அம்மன் கோயில் வளாகத்தில் பாட வகுப்புகளை நடத்திவருகிறோம். இந்த இடம் போதுமானதாக இல்லாததால், கோயிலை ஒட்டியுள்ள மாட்டுத் தொழுவத்தை சீரமைத்து அங்கும் பாட வகுப்பு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
இப்பள்ளி மன்னார்குடி ஒன்றிய நிர்வாகத்தில் உள்ளதா அல்லது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்பதில் குழப்பம் உள்ளதால், மாணவ, மாணவியர்களின் நலன் கருதி இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி 
வருகின்றனர்.
ஒரு  நாடு வளர்ச்சியடைய  வேண்டும் என்றால் கிராமம்  வளர்ச்சி பெறவேண்டும் என கிராமத்துக்கு முக்கியத்துவம்  கொடுத்த  மகாத்மா காந்தி, கல்விக்கண்  திறந்த கர்மவீரர்  காமராசர்,  மாணவர்கள்தான் நாட்டின்  எதிர்காலம் என சூளுரைத்த அப்துல் கலாம்  வாழ்ந்த  நாட்டில்,  இதுபோன்ற பள்ளிக்கூடத்தின் நிலை பரிதாபத்துக்குரியது என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com