மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் விளைச்சலைத் தருமா? விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் விளைச்சலைத் தருமா என கவலையில் ஆழ்ந்துள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் விளைச்சலைத் தருமா என கவலையில் ஆழ்ந்துள்ளனர் இரண்டாம் முறையாக பயிர்களுக்கு உயிர்ப்பூட்டும் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள். 
திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மாவட்டம். ஆற்றுப் பாசனத்தை அதிகமாக நம்பியிருக்கும் இங்கு இதர பயிர்களை விட நெல் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது.  குறுவை, சம்பா, தாளடி என சாகுபடி நடைபெறுவது வழக்கம். மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-இல் தண்ணீர் திறக்கப்பட்டால், குறுவை, சம்பா சாகுபடிகள் தடையின்றி நடைபெறும். அதே நேரம் தண்ணீர் திறப்பு தள்ளிப்போனால் சாகுபடியில் குழப்பமும், குளறுபடிகளும் ஏற்பட்டு, அந்த ஆண்டு விவசாயம் தள்ளாடும் நிலை ஏற்படும்.
 நிகழாண்டு மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்படாததால் பல விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய தயக்கம் காட்டினர். எனினும், ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கினர். இதையடுத்து 23,324 ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற்றிருப்பதாக வேளாண்துறை தெரிவிக்கிறது. 
 சாகுபடி...
சாகுபடிக்காக அக்.2-இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், சாகுபடி பணிகளை தொடங்கினர்.  ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டிருந்தால், 150 நாள்களை உடைய நீண்ட கால ரகங்களைப் பயிரிடும் விவசாயிகள்,  தாமதமான தண்ணீர் திறப்பு காரணமாக குறுகிய கால மற்றும் மத்திய கால ரகங்களைப் பயிரிட்டனர். வேளாண்துறை கணக்கெடுப்பின்படி தற்போது வரை சம்பா மற்றும் தாளடி சாகுபடி 1,48,651 ஹெக்டேரில் நடைபெற்றுள்ளது.
இதில் சம்பா சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி முறையில் 20,079 ஹெக்டேரிலும், இயல்பான நடவு முறையில் 11,516 ஹெக்டேரிலும், நேரடி நெல் விதைப்பு முறையில் இதுவரை 96,119 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 1,27,714 ஹெக்டேரில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தாளடியில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 12,562 ஹெக்டேரிலும், இயல்பான நடவு முறையில் 8,199 ஹெக்டேரிலும், நேரடி நெல் விதைப்பு முறையில் 176 ஹெக்டேரிலும் என மொத்தம் 20,937 ஹெக்டேரில் தாளடி நெல் பயிர் செய்யப்பட்டுள்ளது.
 மழையால் பாதிப்பு...
தாமதமான சாகுபடி காரணமாக,  பயிரிடப்பட்ட குறைந்த கால ரகங்கள் வளரத்தொடங்கியபோது, அக். மாத இறுதியில் மழை தொடங்கியது. சுமார் 1 வாரத்துக்கும் மேலாக பெய்த மழை, இந்த பயிர்களின் வளர்ச்சியைப் பாதித்துள்ளது. பிறகு மழை சற்று இடைவெளி விட்டபோது, பாதிக்கப்பட்ட பயிர்களை உயிர்ப்பூட்டும் வேலைகளை விவசாயிகள் தொடங்கினர். மாவட்ட நிர்வாகமும் பயிர்கள் வளர்ச்சி பெறவும், தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை காக்கவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், வடிகால்கள் சரியில்லாததால் சராசரியாக பெய்த மழையால் கூட  வெள்ள நீர் வெளியேற வழியில்லாமல் விளைநிலங்களிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் தட்டுக்கிளி அல்லது வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் இந்த நிலை உள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் பி.எஸ். மாசிலாமணி கூறியது: தற்போது சராசரி மழையே பெய்துள்ளது. எனினும், சாகுபடி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளம் பயிர்கள் அதிகம் சேதமடைந்து விட்டன. திருவாரூர் பகுதியில் நாற்றுகள் பாதிக்கப்பட்டதால், நாற்றுகளுக்காக பல்வேறு இடங்களில் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது 2 ஏக்கர் நிலத்தில் 6 வகையான நாற்றுகளை வாங்கி நட்டுள்ளேன். நிகழாண்டு விதைகளில் முளைப்புத் திறனும் மிகவும் குறைவாகவே உள்ளது என்றார்.
ஒவ்வொரு கிராமங்களிலும் கோட்டம் எனப்படும் பள்ளமான பகுதிகள் உண்டு. அதிகமான மழைநீர் இந்த பகுதியில் தேங்கும். தொடக்கத்தில் எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்த இந்த பகுதிகளில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த கோட்டப் பகுதிகளில் இருந்து மழைநீர் மெல்ல வடிந்து வருகிறது. குறிப்பாக வலங்கைமான், குடவாசல், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் இந்த நிலை உள்ளது.
இதுகுறித்து அம்மனூர் விவசாயி முத்துக்குமரசாமி கூறியது:
 முதல் முறையில் பயிர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து இரண்டாவது முறையாக சாகுபடி பணிகளை செய்துள்ளோம். ஒருவேளை பயிர்கள் வளர்ந்தால் 50 சதவீத மகசூல் மட்டுமே வர வாய்ப்புள்ளது. ஆனால், இந்த 50 சதவீத பயிர்களை காக்க மீண்டும், உரமிடுவது, பாதுகாப்பது என 100 சதவீத பணிகளை நாங்கள் செய்தாக வேண்டும் என்றார்.
 விவசாயிகளின் ஆபத்பாந்தவனாக விளங்கும் மழை, சாகுபடி பயிர்களின் வேர்களை ஆட்டம் காண வைத்ததன் மூலம், விவசாயிகளின் நம்பிக்கையை அசைத்து விட்டது. ஆனால் இன்னமும் நம்பிக்கையோடு, களையெடுப்பது, உரமிடுவது, தண்ணீரை பாதுகாப்பது என விவசாயப் பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com