கடல் நீர் உள்புகுவதைத் தடுக்க வளவனாற்றில் தடுப்பணைக் கட்ட வலியுறுத்தல்

முத்துப்பேட்டை பகுதியில் வளவனாற்றில் கடல் நீர் புகுவதைத் தடுக்க தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ப.ஆடலரசனிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

முத்துப்பேட்டை பகுதியில் வளவனாற்றில் கடல் நீர் புகுவதைத் தடுக்க தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ப.ஆடலரசனிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கரையங்காடு, கற்பகநாதர்குளம், இடும்பாவனம், தொண்டியக்காடு ஆகிய கிராமங்கள் கடற்கரை பகுதிகளாகும். இப்பகுதி மட்டுமின்றி அருகில் உள்ள மேலபெருமழை, கீழப்பெருமழை, குன்னலூர், எக்கல், கடம்பவிளாகம் உள்ளிட்ட திருத்துறைப்பூண்டி வரை நிலத்தடி நீர் உவராகிவருகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
இதைத் தடுக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கற்பகநாதர்குளம் அருகே வளவனாற்றின் குறுக்கே கடந்த ஆண்டு மணல் மூட்டைகளால் தாற்காலிக தடுப்பணை அமைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக முத்துப்பேட்டை மற்றும் கடற்கரைப் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசி வருவதால், இப்பகுதியில் ஓடும் ஆறுகளில் கடல் நீர் உள்புகுந்து வருகிறது. மேலும், வளவனாற்றில் பொதுமக்கள் உருவாக்கிய தடுப்பணையை தாண்டி கடல் நீர் உட்புகுந்து வருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியைப் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆறுகளின் வழியே கடல்நீர் உள்புகுவதைத் தடுக்க தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அவர், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுப்பணித் துறையினர் மூலம் ஆய்வு மேற்கொண்டு, நிரந்தர தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது, திமுக முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் இரா.மனோகரன், கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை ஒன்றிய துணை அமைப்பாளர் ஜீவானந்தம், நாகலிங்கம், மீனவர் சங்கத் தலைவர் செல்வராஜ், படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜபாக்கியம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com