வடிகால்கள்,  பாசன  வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரக் கோரிக்கை

வடகிழக்குப்  பருவமழையால் விளைநிலங்களில் மழைநீர் சூழக் காரணமான வடிகால்கள் மற்றும்  பாசன வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

வடகிழக்குப்  பருவமழையால் விளைநிலங்களில் மழைநீர் சூழக் காரணமான வடிகால்கள் மற்றும்  பாசன வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட  அறிக்கை:
தற்போது தொடங்கியிருக்கும் வடகிழக்குப்  பருவமழை வேளாண்மையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கோட்டூர்,  முத்துப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில்  அதிக  அளவிலும்,   பிற வட்டாரங்களில் பகுதி அளவிலும் பயிர்கள் மூழ்கியும், இளம் பயிர்கள் அழுகிய நிலையிலும் உள்ளன.
  மத்திய அரசை நிர்பந்தித்து,   கர்நாடகத்திலிருந்து தண்ணீரைப் பெற்று ஜூலை மாதத்தில்  தந்திருந்தால், பயிர்கள்  அனைத்தும்  இருமாத பயிர்களாக வளர்ந்து,   மழையில் மூழ்காமல் பாதுகாத்திருக்கலாம். பல பகுதிகளில் தெளித்த விதைகள் முளைக்காதது,   வெட்டுக்கிளிகள் அழித்தது  உள்ளிட்ட காரணங்களால்  இரண்டாவது முறையாக மறுசாகுபடி மேற்கொண்டனர். தற்போது  இந்தப் பயிர்கள்  முற்றிலும்  அழிந்துள்ளன.
 மேலும்  வீடுகள்   இடிந்துள்ளன. உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்புக்கு வடிகால்கள் தூர்வாரப்படாததே முதன்மையான காரணமாகும்.  ஆனால்,  தூர்வாரும்  பணிகள் நடைபெற்றிருப்பதாக அமைச்சர்கள் கூறியிருப்பது தவறானது.  குடிமராமத்து என்ற பெயரால் 100 கோடி ரூபாய்க்கு பணி நடந்துள்ளது என்று கூறுவது பொய்யானது.  இதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தற்போதைய மழையில் எங்கெங்கு வடிகால் மற்றும் பாசன நீர்நிலைகள் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறதோ அவைகளைக் கண்டறிந்து அவசரமாக தூர்வார வேண்டும்.
சாகுபடி பணிகள் நடந்துவரும் நிலையில்  கடந்த ஆண்டுக்கான காப்பீடு திட்ட இழப்பீடு இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.  அத்துடன்  பயிர்க்கடனும்  தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் கொடுக்கவில்லை. எனவே,  பயிர்க்கடனை அனைத்து விவசாயிகளுக்கும் உடன் வழங்க வேண்டும். கடன் வழங்கும் கால தாமதத்துக்கேற்ப  2017 - 2018 பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத்தொகை செலுத்தும் காலத்தை நீட்டிப்பு செய்ய  வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com