கூட்டுப்பண்ணையம் திட்டம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும்: வேளாண் துறை இயக்குநர்

கூட்டுப்பண்ணையம் திட்டம், விளைப் பொருள்களுக்கு மதிப்பைக் கூட்டி, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் சிறப்பான திட்டம் என்றார் தமிழக வேளாண் துறை இயக்குநர் ச. தெட்சிணாமூர்த்தி.

கூட்டுப்பண்ணையம் திட்டம், விளைப் பொருள்களுக்கு மதிப்பைக் கூட்டி, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் சிறப்பான திட்டம் என்றார் தமிழக வேளாண் துறை இயக்குநர் ச. தெட்சிணாமூர்த்தி.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, 7 மாவட்டங்களின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்களுக்கான கூட்டுப்பண்ணையம் திட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:
கூட்டுப்பண்ணையம் திட்டத்தில், ஒருமித்த கருத்துடைய சிறு, குறு விவசாயிகளைக் கொண்டு உழவர் ஆர்வலர் குழுக்களும், 5 உழவர் ஆர்வலர் குழுக்களை கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுமமும் அமைக்கப்படுகிறது.
உழவர் ஆர்வலர் குழுக்களில் உள்ள விவசாயிகள் மூலம் பயிர் தெரிவு செய்தல், ஒருங்கிணைந்து இடுபொருள்கள் வாங்குதல், பணியாள்களைப் பகிர்ந்து கொள்ளுதல், உற்பத்தியை ஒருங்கிணைந்து சந்தைப்படுத்துதல், உற்பத்தி பொருள்களுக்கு மதிப்பூட்டி விற்பனை செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கும்.
மேலும், விவசாயிகள் கூட்டு முயற்சியில் சாகுபடி பணிகளை மேற்கொள்வதால் வேளாண் பணிகளுக்குத் தேவையான இயந்திரங்களை எளிதில் பயன்படுத்த முடியும். சேமிப்பை ஊக்கப்படுத்தி, குழு உறுப்பினர்களுக்குத் தேவையான கடனைப் பெற முடியும்.
கூட்டுப்பண்ணையம் திட்டம் மூலம், மாவட்டக் குழுவின் ஒப்புதலுடன், உழவர் உற்பத்தியாளர் குழுமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒவ்வொரு குழுவுக்கும் ரூ. 5 லட்சம் அரசு நிதி உதவியாக வழங்கப்படும்.
கூட்டுப்பண்ணையம் திட்டம் மூலம், திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 3,600 விவசாயிகள் பயன்பெறுவர். இத்திட்டம், உணவு தானிய உற்பத்தி என்பதை தாண்டி, உற்பத்தி பொருள்களுக்கு மதிப்பை கூட்டி விற்பனை செய்ய இன்றியமையாததாக இருக்கும் என்றார் வி. தெட்சிணாமூர்த்தி.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி தலைமை வகித்தார். வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, வேளாண் இணை இயக்குநர் மயில்வாகனன், துணை இயக்குநர் மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com