சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிக்காத 2,953 பேருக்கு நோட்டீஸ்: ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் உரிய வகையில் சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிக்காத 2,953 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ. 12.5 லட்சம் அபராதம்

திருவாரூர் மாவட்டத்தில் உரிய வகையில் சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிக்காத 2,953 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ. 12.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட வண்டிக்காரத் தெரு, புதுத்தெரு, மானந்தியார் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் வியாபார நிறுவனங்களில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் கடைப்பிடிக்கப்படும் சுற்றுப்புறத் தூய்மை குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, புதுத்தெருவில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தின் மேல் பகுதியில் மழை நீர் தேங்கி, கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் நிலை இருந்ததை அறிந்த ஆட்சியர், அந்தக் கட்டடத்தின் உரிமையாளருக்கு கேட்பாணை (நோட்டீஸ்) வழங்க உத்தரவிட்டார்.
ஆய்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் தெரிவித்தது :
திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மண்டல அலுவலர்கள், களப்பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உரிய வகையில் சுகாதாரம் பராமரிக்காத கட்டடங்கள் மற்றும் இடங்களின் உரிமையாளர்கள் 2,953 பேருக்கு கேட்பாணை வழங்கப்பட்டு, ரூ. 12.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் காந்திராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயப்பிரதா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com