சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விருதுகள் மற்றும் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ரொக்கப் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விருதுகள் மற்றும் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ரொக்கப் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர்கள், தன்னார்வ நிறுவனங்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு  அரசு 2017-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. 
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு விருதுக்கு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விருதுக்கு  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தனி நபர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கத் தகுதிகள்: விண்ணப்பதாரர் தனி நபராக இருந்தால் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்விப் பிரிவில் தனி நபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் அல்லது நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்விப் பிரிவின்கீழ் அறிக்கையில் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்த பணி மட்டும்  நிறுவனங்கள் சமர்ப்பிக்கலாம்.
தனிநபராக இருப்பின் தமிழக அரசால்  வேறு எந்த விருதுக்கும் அனுப்பப்படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையுடன் இணைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பிரிவில் விண்ணப்பிக்கக் கூடிய தனிநபர் அல்லது நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச் சார்ந்த பிரசுரங்கள்,  பத்திரிகை குறிப்புகள்,  திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு,  பயனாளிகள் அல்லது பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம் பெற வேண்டும். 
இக்களப்பணியை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அல்லது தேர்வுக் குழுவினர் தணிக்கை செய்வர். ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் அல்லது நிறுவனம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விருதுகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மூன்று பிரிவுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
ஏற்கெனவே சுற்றுச்சூழல் துறையால் விருதுகள் வழங்கப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஆறு நகல்களில் இயக்குநர், சுற்றுச்சூழல் துறை என்ற பெயரில் ரூ.100-க்கான கேட்பு வரைவோலை மற்றும் மூன்று கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படங்களையும் இணைத்து  அனுப்ப வேண்டும்.
சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை  ஊக்குவிக்கும் வண்ணம் 2017- ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 2017 வரை வெளியான தனிநபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து உருவாக்கிய சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு   ரொக்கப் பரிசும், பாராட்டு மடலும் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ரொக்கப் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். 
ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஆங்கில கட்டுரையானால் ஆராய்ச்சிக் கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு இணைக்கப்பட வேண்டும். இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி அறிவியல் ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டது என்ற விவரம் அளிக்க வேண்டும். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் பிரசுரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஆராய்ச்சிக் கட்டுரை பிரிவின்கீழ் சம்பந்தப்பட்ட  தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டிருப்பின் அப்புத்தகத்தை  முழுமையாக இணைக்க வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து பிரசுரம் செய்திருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர். ஆராய்ச்சிக் கட்டுரையின் ஆறு நகல்கள் அனுப்ப வேண்டும். ஏற்கெனவே விருது பெற்ற தனிநபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பங்களை இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரைத் தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை,  சென்னை-600 015 என்ற முகவரியில் அனைத்துப் பணி நாள்களிலும் மார்ச் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை  பெற்றுக் கொள்ளலாம். 
தவிர விண்ணப்பத்தை w‌w‌w.‌e‌n‌v‌i‌r‌n‌o‌m‌e‌n‌t.‌t‌n.‌n‌i​c.‌i‌n  இருந்து எடுத்துக் கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு 044-24336421 மற்றும் பேக்ஸ் 044-24336594  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பத்தை மார்ச்15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com