கிராம உதவியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது. சங்கத்தின் வட்டத் தலைவர் ஜி. செளந்தரராஜன் தலைமையில், வெள்ளிக்கிழமை மாலை வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் வட்டத் தலைவர் எம். ராமன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் எஸ். ராதா முன்னிலை வகித்தார். சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
இதில், பெண்கள் உள்பட 38 பேர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். முன்னதாக, முன்னாள் வட்டச் செயலாளர் ஆர். முத்துகிருஷ்ணன் வரவேற்றார். இப்போராட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.16) மாலை வரை நடைபெறும் என கிராம உதவியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கிய காத்திருப்புப் போராட்டத்தை, அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க வட்டத் தலைவர் வி. பாண்டியன், மாவட்ட இணைச் செயலர் ஆர். முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மன்னார்குடியில்...
மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். வட்டச் செயலர் வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமரன், சரக அமைப்பாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com