உரிய காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்

உச்சநீதிமன்றம் விதித்த உரிய காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன். 

உச்சநீதிமன்றம் விதித்த உரிய காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன். 
திருவாரூரில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: கடந்த சில ஆண்டுகளாக கடும் பிரச்னைகளை சந்தித்து வரும் தமிழக விவசாயிகள், வெளியாகவுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதேபோல், தமிழகத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ள நிலையில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நிதிநிலை அறிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
கரும்புக்கான நிலுவைத் தொகை, பயிர்க் காப்பீடுத் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே, விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்பார்த்துள்ளனர். 
டிடிவி. தினகரன் ஏற்கெனவே கட்சி நடத்தி வருகிறார். அக்கட்சிக்கு அவர் பெயர் சூட்டவில்லை. அவர் விரும்பும் பெயரை தேர்தல் ஆணையம் வழங்கி,  நடுநிலையோடு செயல்படவேண்டும். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதாக தெரிகிறது. தினகரனை பார்த்து தமிழக முதல்வர் அஞ்சுவது இதன் மூலம் தெரிய வருகிறது. ஏற்கெனவே, கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளார். யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சித் தொடங்கலாம்.  ஆனால் அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகளை தொடர்ந்தே  மக்கள் அவர்களை அங்கீகரிப்பார்கள்.
உத்தரப்பிரதேச தேர்தல் தோல்வியால் பாஜகவின் செல்வாக்கு படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது. இச்சரிவால் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தும் முயற்சி பாஜகவுக்கு தொடர் தோல்வியைத் தரும். பாஜகவின் தோல்வி வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பாகும். மத்திய அரசு,  தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டு, 24 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க சர்வதேச டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இச்செயலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் விதித்த காலகெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். அதற்கான முழு முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com