திருத்துறைப்பூண்டி பகுதியில் "கஜா' கோரதாண்டவம்

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் முறிந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை- வேதாரண்யம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடந்தபோது, திருத்துறைப்பூண்டி பகுதியில் 100 கி.மீ.க்கும் அதிகமான காற்று வீசியது. இந்த புயலின் தாக்கம் கடந்த 1956-ஆம் ஆண்டு வீசிய புயலைவிட கடுமையாக இருந்ததாக முதியவர்கள் தெரிவித்தனர்.
கஜா புயலால் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளின் மேற்கூரைகள் பலத்த சேதமடைந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகத்தை நிறுத்தியிருந்ததால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் மிகுதியாக உள்ள தென்னந்தோப்புகளில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் மரங்கள் வீழ்ந்து கிடந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்து கிடந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர், காவல்துறையினருடன இணைந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்கவில்லை. நீண்ட கால சம்பா பயிர்கள் ஓரளவு தப்பிய நிலையில், நடுத்தரகால ரகங்கள் கதிர்வரும் நிலையிலும், சூள்கட்டிய நிலையிலும் இருந்ததால், இப்பயிர்களில் சூள் பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பு ஏற்படுமோ என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 புயல் மழையால் வீடுகளை இழந்தவர்கள் தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், இடும்பவனம், ஜாம்பவானோடை, தில்லைவிளாகம் ஆகிய இடங்களில் உள்ள பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் இருந்து எந்த பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
 மாவட்ட நிர்வாகம் சார்பில் மண்டல அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சேகர், மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் பத்மாவதி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கே.மகேஷ்குமார், துணை வட்டாட்சியர்கள் செந்தில், இளங்கோவன் ஆகியோரும்,  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இனிக்கோதிவ்யன், சந்திரசேகரன், கமால்பாட்சா, நந்தகோபால் , நகராட்சி ஆணையர் நாகராஜன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ரவி உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
 சாலைமறியல்: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சங்கேந்தி பவுண்டடி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அங்குள்ள பள்ளிக் கூடத்தில் போதுமான இட வசதியில்லாததால், கூடுதல் இடவசதி செய்துதரக் கோரி சங்கேந்தி கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப் பேரவை உறுப்பினர் ப.ஆடலரசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.உலகநாதன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com