ராமேசுவரம், சீரடி, குமரிக்கு திருவாரூர் வழியாக ரயில்களை இயக்க நடவடிக்கை: எம்பி கே.கோபால்

சீரடி, ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு திருவாரூர் வழியாக ரயில் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு

சீரடி, ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு திருவாரூர் வழியாக ரயில் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாகை மக்களவை உறுப்பினர் கே. கோபால் தெரிவித்தார்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:
 திருவாரூர் வழியாக சீரடிக்கு வாராந்திர ரயில் இயக்கவும், அதேபோல் திருவாரூர்- மதுரை வழியாக கன்னியாகுமரிக்கும், காரைக்குடி வழியாக ராமேசுவரத்துக்கும் ரயில்கள் இயக்க ரயில்வே துறை மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
 மேலும், அதிகாலை நேரத்தில் திருச்சி மார்க்கத்தில் ரயில் வசதிக்கும், மாலை நேரத்தில் திருச்சியிலிருந்து காரைக்கால் மார்க்கத்திற்கு ரயில் இயக்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் திருவாரூர் - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணிகள் முடிந்த பின்னர், பல சிறப்பு ரயில்கள் திருவாரூர் வழியாக இயக்கப்படும். மேலும் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி, நாகப்பட்டினத்திலிருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டி ரயில் பாதைப் பணிகளும் விரைவில் முடிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது என்றார்.
கூட்டத்துக்கு, ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.தெட்சிணாமூர்த்தி  தலைமை வகித்தார். 
செயலாளர் ப.பாஸ்கரன், பொருளாளர் மணிகண்டன், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் மண்டல செயலாளர் பாண்டுரங்கன், நாகை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் மோகன், நாகை அருள், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சாய்கருணா, ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் அப்பாராஜ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com