மருத்துவமனைகளில் அலைமோதும் நோயாளிகள்! இடமின்றித் தவிக்கும் அவலம்

தில்லியில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகளைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது.
மருத்துவமனைகளில் அலைமோதும் நோயாளிகள்! இடமின்றித் தவிக்கும் அவலம்

தில்லியில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகளைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு இடம் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தில்லியில் நிகழாண்டில் மட்டும் டெங்கு, சிக்குன்குனியா நோய்க்கு இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.  சிக்குன்குனியாவால் 1,724 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கிருமிகள் மூலம் பரவும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நகர அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 38 மருத்துவமனைகள், மொஹலா கிளினிக்குகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் எய்ம்ஸ், ஆர்எம்எல் உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூல்: தில்லியில் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகளுடன் சேரும் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியா பரிசோதனைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால், நோய்க்கான பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், அரசு  மருத்துவமனைகளில் நோயாளிகள் சேருவதற்கு போதுமான படுக்கை வசதிகள் கிடையாது.  இதனால், பல்வேறு அரசு மருத்துவமனை வளாகங்களிலும், அதையொட்டிய நடைபாதைகளிலும் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டிருக்கும் அவல நிலை உள்ளது.

இதுகுறித்து அறிய தில்லி அரசின் எல்என்ஜிபி, மத்திய அரசின் எய்ம்ஸ் ஆகிய இரு மருத்துவமனைகளில் "தினமணி' கள ஆய்வு செய்தது. அதன் விவரம்:
அரசு மருத்துவமனைகளின் நிலை: தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் (எல்என்ஜேபி) டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு உள்ளது. எனினும், போதிய படுக்கை வசதிகள் இல்லை.

இங்கு டெங்குவுக்கு சிகிச்சை பெற வந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ் (55) கூறுகையில், "கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் அவதிப்படுகிறேன். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக உள்ளது. ஆனால், படுக்கை வசதி இல்லாததால் வராண்டாவில் தங்கி சிகிச்சை பெறுகிறேன்' என்றார்.

இம்மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜே.சி.பாஸி கூறுகையில், "காய்ச்சல் என வருவோருக்கு உரிய மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. டெங்கு,சிக்குன்குனியா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட நோயாளியை அதற்கான வார்டுகளில் சேர்க்கிறோம்' என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனை: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழாண்டில் சிக்குன்குனியா அறிகுறியுடன் சேர்க்கப்பட்ட ஒரு நோயாளி உயிரிழந்துள்ளார். இம்மருத்துவமனையில் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் சிபாரிசுடன் வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு படுக்கை வசதியுடன் சிகிச்சை கிடைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இம்மருத்துவமனையில் தில்லி புஷ்ப விஹாரைச் சேர்ந்த ரேகா குப்தா தனது மகளை சேர்த்துள்ளார். அவர் கூறுகையில், "எனது மகளுக்கு சிக்குன்குனியா பாதிப்பு உறுதியானதால் சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 10 நாள்களுக்கு முன்பு வந்தோம். இதுவரை படுக்கை வசதி வழங்கப்படவில்லை' என்றார்.

மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அமித் குப்தா கூறுகையில், "டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்' என்றார்.

தில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய சுகாதார பிரிவு திட்ட இயக்குநர் விபவ் வர்ஷினி கூறுகையில், "டெங்கு, சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கையில் தில்லியில் ஆளும் அரசும் மத்திய அரசும் மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. டெங்கு, சிக்குன்குனியா நோய்களுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்க நீண்ட கால செயல் திட்டம் அவசியம். வெளிநாடுகளில் இதுபோன்ற நோய்களை பரப்பும் வைரஸ்களை தடுக்க பல உயர் தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால், மத்திய அரசு அந்தத் தொழில்நுட்பத்துக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை' என்றார்.

 டெங்கு, சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கையில் தில்லி மாநகராட்சிகள், தில்லி அரசின் சுகாதாரத் துறை, மத்திய சுகாதாரத் துறை ஆகியவை இடையே சீரான ஒருங்கிணைப்பின்மை நிலவுவதே இந்நோய் பாதிப்பு அதிகரிக்க முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
படங்கள்: டி.ராமகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com