சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: இன்று போக்குவரத்தில் கட்டுப்பாடு

சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்வையொட்டி ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்தில் தில்லி காவல் துறை சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்வையொட்டி ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்தில் தில்லி காவல் துறை சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லி செங்கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறும்.
இதற்காக அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகளை தில்லி காவல் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது குறித்து தில்லி காவல் துறையின் இணை ஆணையர் கரிமா பட்நாகர் (போக்குவரத்து) கூறியதாவது:
சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிகழ்வையொட்டி அன்றைய தினம் சுமார் 6 முக்கியச் சாலைகள் மூடப்படவுள்ளன. சில சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்படவுள்ளது. நேதாஜி சுபாஷ் மார்க், லோதியான் சாலை, எஸ்பி முகர்ஜி மார்க், சாந்தினி செளக் சாலை, நிஷாத் ராஜ் மார்க், எஸ்பிளனேட் சாலை ஆகியவையும் இதை இணைக்கும் சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 9 மணி வரை மூடப்படும். இச்சாலைகளை இந்த குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அணிவகுப்பு ஒத்திகையையொட்டி நிஜாமுதீன்-ஐஎஸ்பிடி பாலத்துக்கும் இடையே உள்ள திலக் மார்க், மதுரா சாலை, பகதூர் ஷா ஜஃபர் மார்க், வட்டச்சாலை ஆகியவற்றில் லேபிள்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவர்கள் இச்சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் வேறு சாலைகள் வழியாகச் செல்ல வேண்டும்.
அதே சமயம், வடக்கு-தெற்கு தில்லி பகுதியில் அரவிந்தோ மார்க், கனாட் பிளேஸ்- மின்ட் ரோடு, ரிக் ரோடு-ஐஎஸ்பிடி, நிஜாமுதீன் பாலம் ஆகியவற்றில் செல்பவர்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்படுவர். அதே போல, கிழக்கு-மேற்கு தில்லி பகுதியில் டிஎன்டி-என்ஹெச்24-விகாஸ் மார்க், விகாஸ் மார்க்-டிடியு மார்க், பொலிவார்டு சாலை-பர்ஃப்கானா ஆகிய சாலைகளில் செல்பவர்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்படுவர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை நிஜாமுதீன் பாலம், வஜிராபாத் பாலம் ஆகியவற்றில் சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களிடையே செல்லும் பேருந்துகள் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மஹாரானா பிரதாப் ஐஎஸ்பிடி, சராய் காலே கான் ஐஎஸ்பிடி ஆகியவற்றில் செல்ல அனுமதிக்கப்படாது.
தில்லி போக்குவரத்து நிறுவனப் பேருந்துகள் உள்பட உள்ளூர் நகரப் பேருந்துகள் அனைத்தும் ரிங் ரோட்டில் காலை 5 முதல் காலை 9 மணி வரையிலும் செல்ல முடியாது.
தில்லி செங்கோட்டை, ஜாமா மசூதி, புதுதில்லி ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து செல்லும் பேருந்துகள் வேறு பாதையில் திருப்பிவிடப்படும் என்றார் அவர்.
இரு நாள்கள் வாகன நிறுத்த மையங்கள் மூடல்
இதற்கிடையே, சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்த மையங்கள் ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் மூடியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்புக் காரணங்களுக்காக தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்த மையங்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வாகன நிறுத்த மையங்களை 'தூய்மை இந்தியா திட்டத்தின்' கீழ் தூய்மைப்படுத்துமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாகன நிறுத்த மையங்களை ஆய்வு செய்யவும்அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com