கொலை வழக்கு: சாட்சியை ஆஜர்படுத்தாததால் இருவர் விடுதலை

சாட்சியம் இல்லாததால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாட்சியம் இல்லாததால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு விவரம் வருமாறு:  நிகழாண்டு ஜனவரி 21-ஆம் தேதி புது தில்லி ரயில் நிலையம் அருகே உள்ள  கோயில் ஒன்றின் கூரைப் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த இருவரை நேரில் பார்த்ததாகவும்,  கல், கத்தியால் தாக்கி கொன்றதாகவும் 16 வயது மைனர் சிறுவன் போலீஸில் வாக்கு மூலம் அளித்தார்.
இதையடுத்து, போலீஸார் தில்லியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரதேப் பரிசோதனை அறிக்கையிலும் கல்லால் தாக்கி கொல்லப்பட்டதற்கான தடயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தங்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் புனைந்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.  நேரில் கண்ட சாட்சியத்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.
இதுகுறித்து போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், "வழக்கில் தொடர்புடைய சாட்சி, ஒரு நாடோடி என்பதால்  அவரது முகவரியைக் கண்டறிய முடியவில்லை' எனக் கூறினர்.  இந்நிலையில், இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி நரீந்தர் குமார் பிறப்பித்த உத்தரவு:  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் போலீஸ் தரப்பில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. 
வழக்குக்கு வலுசேர்க்கும் முக்கிய ஆதாரமான கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட  சாட்சியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறிவிட்டனர்.  குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்பதால் இருவரும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com