துப்பாக்கிகள் விற்றதாக உ.பி. இளைஞர் கைது: 28 துப்பாக்கிகள் பறிமுதல்

தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக உத்தர

தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக உத்தர பிரதேச மாநிலத்தைச்  கும்பலைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 28  துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து  தில்லி துவாரகா மாவட்டக் காவல் துறைத் துணை ஆணையர் ஷிபேஷ் சிங் வியாழக்கிழமை கூறியதாவது: 
துவாரகா பகுதியில் அண்மைக் காலமாக கிரிமினல்கள்,  கொள்ளைக் கும்பல்கள் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் சட்டவிரோத ஆயுத சப்ளை நடைபெறுவது தெரிய வந்தது.
மேலும், பல்வேறு ஆயுத விற்பனைக் கும்பல் மூலம் மேற்கு உத்தர பிரதேச பகுதியில் இருந்து தேசியத் தலைநகர் வலயப் பகுதி, ஹரியாணாவுக்கு ஆயுதங்கள் கடத்தி வந்து விற்கப்படுவதும் தெரியவந்தது.  இதையடுத்து, துவாரகா காவல் துறையின் மூலம் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்தப் படையினர் பல்வேறு இடங்களில் நடைபெறும் சட்டவிரோத ஆயுத சப்ளை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், புதன்கிழமை தனிப்படை போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது.  அதில்,  உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஆயுத கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் துவாரகா பகுதியில் ஆயுதங்களை சிலருக்கு விற்பதற்காக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரிடம் துப்பாக்கி வாங்குவது போல் ஒரு போலியான நபர் அனுப்பிவைக்கப்பட்டார்.  அவர் துப்பாக்கி வைத்திருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஏராளமான துப்பாக்கிகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த நபர் உத்தம் நகர் சாலையில் உள்ள நஜஃப்கர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு காரில் வந்த அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில்,  அவர் உத்தர பிரதேச மாநிலம்,  மீரட்,  கித்வாய் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது இந்தேஜார் (28) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஒரு 01 ரக துப்பாக்கி,  27 நாட்டு கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களாக துப்பாக்கிகளை அவர் தலைமையிலான கும்பல் சட்டவிரோதமாக விற்று வந்தது தெரிய வந்தது. இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தில்லி,  ஹரியாணா, உத்தர பிரதேசம், தேசியத் தலைநகர் வலயம் ஆகிய பகுதிகளில் சுமார் 350 துப்பாக்கிகளை சட்டவிரோதமாக விற்றுள்ளது தெரியவந்துள்ளதாக காவல் அதிகாரி ஷிபேஷ் சிங் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com