குடியரசுத் தலைவர் தேர்தல்: தில்லி சட்டப்பேரவையில் வாக்குப் பதிவு

குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி,  தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பேரவைத் தலைவர்

குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி,  தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல்,  முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட   சட்டப்பேரவை உறுப்பினர்கள் 67 பேர் வாக்களித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குச்சாவடி அமைத்து விரிவான ஏற்பாடுகளை சட்டப்பேரவைச் செயலகம் செய்திருந்தது.  வாக்குப் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
வாக்குப் பதிவு தொடங்கியவுடனேயே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா,  முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா,  சட்டப் பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல்,  துணைத் தலைவர் ராக்கி பிர்லா ஆகியோர் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
கேஜரிவால் வேண்டுகோள்: குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தியுள்ள வேட்பாளரான  மீரா குமாரை ஆதரிக்கிறோம்.  
அனைவரும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.  மக்களாட்சியில் அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றி பெறுகிறார்' என்றார்.
 துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், "குடியரசுத் தலைவர் தேர்தலில்  யார் வெற்றி பெறுவார் என்பதை விட நாடு வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்' என்றார்.
பாஜக  உறுப்பினர் ஓம் பிரகாஷ்  சர்மா கூறுகையில், "முதல்வர் கேஜரிவாலுடன் முரண்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சுமார் 10 முதல் 12 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜக கூட்டணி வேட்பாளரான ராம் நாத் கோவிந்த்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்' என்றார்.
ஆம் ஆத்மி அதிருப்தி உறுப்பினர் கபில் மிஸ்ரா கூறுகையில்,  "அடுத்த குடியரசுத் தலைவராக வெற்றி பெறவுள்ளவருக்கே வாக்களித்தேன்' என்றார்.
முதல்வருக்கு அச்சம்:  தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், "குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வாக்குகளை மாற்றி போட்டுவிடுவார்கள் என்ற அச்சம் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உள்ளது.
இதன் காரணமாகவே மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்' என்றார்.
ஏன் வாக்களிக்கவில்லை?: மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்டது தில்லி சட்டப்பேரவை.  இதில் பவானா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினாராக இருந்த வேத்பிரகாஷ்  தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.  
தற்போது உள்ள 69 உறுப்பினர்களில்  67 பேர் மட்டுமே வாக்களித்தனர்.  இதில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த செளரவ் பரத்வாஜ், தேவேந்திர ஷெராவத் ஆகிய இருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
 இது குறித்து ஆம் ஆத்மி உறுப்பினர் தேவேந்திர ஷெராவத் கூறுகையில்,  "எனது பிஜ்வாசன் தொகுதியில் உள்ள  அடிப்படை பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் வாக்குப் பதிவில் நான் பங்கேற்கவில்லை' என்றார். செளரவ் பரத்வாஜ் வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com