நெடுவாசல் "ஹைட்ரோ கார்பன்' திட்ட விவகாரம்: முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்திய அமைச்சர் யோசனை

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் தொடர்பாக உள்ளூர்வாசிகளிடையே நிலவியுள்ள சந்தேகங்களைக்

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் தொடர்பாக உள்ளூர்வாசிகளிடையே நிலவியுள்ள சந்தேகங்களைக் களையவும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறியவும் விரைவில் சம்பந்தப்பட்ட கிராமவாசிகள் - மாநில அரசு - பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யலாம் என்று தன்னைச் சந்தித்த நெடுவாசல் குழுவினருக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் யோசனை தெரிவித்தார்.
அமைச்சருடன் சந்திப்பு: இது தொடர்பாக தர்மேந்திர பிரதானை தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் அலுவலக அறையில் நெடுவாசல் குழுவின் பிரதிநிதிகள் புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனர். இக்குழுவில் செந்தில்தாஸ், டி.சரவணன், சுரேஷ் ராமநாதன், சுரேஷ் ஆறுமுகம், ஜெய்சங்கர், கே.மாணிக்கவாசகம், விக்ரம் ஜெயபால், எம். கிருஷ்ணன், வி.பார்த்திபன், சந்தோஷ் குமார், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அக்கட்சியின் சேதுபதி பசுபதி உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
இவர்களை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தர்மேந்திர பிரதானிடம் அழைத்துச் சென்றார்.
இக்கூட்டத்தில் மத்திய வர்த்தகத் துறை  இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு  நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) தலைமை மேலாண் இயக்குநர் தினேஷ் கே. ஷரஃப், அகழாய்வுப் பிரிவு இயக்குநர் ஏ.கே. துவிவேதி ஆகியோரும் பங்கேற்றனர். பகல் 1 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 2.30 மணி வரையிலும் நீடித்தது.
பிரதிநிதிகள் எதிர்ப்பு: ஹட்ரோ கார்பன் திட்டத்தின் பலன்கள் குறித்து போராட்டக் குழுவினரிடம் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கினார். அப்போது குறுக்கிட்ட போராட்டக் குழுவின் பிரதிநிதிகள், "நெடுவாசல் திட்டம் செயல்படுத்தப்படுவதால் உள்ளூரில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். அரிய வகை வண்ணப் பூக்கள் பூத்திடும் மண் வளம் கொண்ட தங்கள் கிராமப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தயவு செய்து செயல்படுத்த வேண்டாம்' என்றனர்.
இதையடுத்து, மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், "நெடுவாசல் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் எப்போது, யாரால் தொடங்கப்பட்டது? எத்தனை முறை மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது?' என்பது குறித்து குழுவின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார். திட்டம் தொடர்பாக ஓஎன்ஜிசி உயரதிகாரிகள் ஆங்கிலத்தில் கூறிய  விவரத்தை போராட்டக் குழுவினருக்கு தமிழில் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான், "ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கோ மண், நீர் வளங்களுக்கோ எவ்வித தீங்கும் ஏற்படாது.
தேச நலன், மாநில நலன்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போராட்டக் குழுவினர் அவர்கள் விரும்பும் ஐஐடி பேராசிரியர்கள் அல்லது வல்லுநர்களை அழைத்து திட்டத்தின் முன்மொழிவு பற்றி ஆய்வு நடத்தி தெளிவு பெற ஏற்பாடு செய்கிறேன்' என்றார்.
அமைச்சர் யோசனை: இருப்பினும், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லை என்பதில் போராட்டக் குழுவினர் உறுதியாக இருந்தனர். இதையடுத்து,  தர்மேந்திர பிரதான், "நெடுவாசல் திட்டம் தொடர்பாக முதலில் மக்கள் கருத்தறிய வேண்டும். மாநில அரசிடம் திட்டம் பற்றி பேசி அதன் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும். பெட்ரோலியத் துறைச் செயலர் மூலம் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் பேசவும், நெடுவாசல் கிராம மக்கள் - மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு - பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யலாம். தொடர்ந்து விவாதித்த பிறகு  ஒரு முடிவுக்கு வரலாம்' என்றார்.
குழுவினர் கருத்து: இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழுவினர், "பெட்ரோலியத் துறை அமைச்சரைச் சந்தித்து எங்கள் கவலை, கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்புக் கிடைத்தது. விரைவில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கை அதிகமாகியுள்ளது' என்றனர்.

வெளிநாட்டில் இருந்து நிதி பெற 11,319 தன்னார்வ நிறுவனங்களுக்கு தடை
புது தில்லி, மார்ச் 22: வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்கு 11,319 தன்னார்வ நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத்தின்கீழ் 11,319 தன்னார்வ நிறுவனங்கள் பெற்றிருந்த உரிமங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதியுடன் காலாவதியாகி விட்டன.
எனினும், அந்நிறுவனங்கள் தங்களது உரிமங்களை புதுப்பிக்கக்கோரி விண்ணப்பம் அளிக்கவில்லை. இதையடுத்து, அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், 14 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்களின் உரிமங்கள், அந்த நிறுவனங்கள் விதியை மீறி செயல்பட்ட காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டு விட்டன. மத்திய அரசிடம் இருக்கும் தகவல்கள், நாடு முழுவதும் 25 ஆயிரம் தன்னார்வ நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் அமைப்பின் இணையதள சேவைகளை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றன என்று அந்தப் பதிலில் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com