கபில் மிஸ்ரா மீது சத்யேந்தர் ஜெயின் அவதூறு வழக்கு

தில்லி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா ஆகியோருக்கு எதிராக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வெள்ளிக்கிழமை அவதூறு வழக்கு தொடுத்து

தில்லி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா ஆகியோருக்கு எதிராக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வெள்ளிக்கிழமை அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
அவர்கள் இருவரும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழல் குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் தெரிவித்ததாக அவர் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.
தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பான மனு, வரும் 29-ஆம் தேதி பெருநகர நீதிமன்ற நீதிபதி ஷெஃபாலி பர்னாலா டான்டன் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது மனுவில் கூறியிருந்ததாவது:
கபில் மிஸ்ரா கடந்த 7-ஆம் தேதி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் லஞ்சப் பணம் ரூ.2 கோடியை கடந்த 5-ஆம் தேதி நான் வழங்கியதாக அப்போது கூறினார்.
ஊடகங்கள் மூலம் இந்த செய்தியை அறிந்த எனது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அதுதொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பினர். கபில் மிஸ்ராவின் அந்தக் குற்றச்சாட்டால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இது கபில் மிஸ்ராவின் சதித் திட்டங்களில் ஒன்றாகும். இதேபோல, தில்லி அரசில் தற்போது இருக்கும் இதர அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மூலம் தில்லி அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதே அவரது திட்டம்.
அமைச்சர்கள் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ஊடகங்களிடம் தெரிவித்த கபில் மிஸ்ரா, அதை தொடர்ச்சியாக செய்து வருகிறார். ஊடகங்களில் தெரிவிப்பதன் மூலம் தில்லி அரசின் நற்பெயருக்கு தேசிய அளவில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அதன் காரணமாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் சட்ட அமைப்புகளை நாடவில்லை. இதன்மூலம் தில்லி அரசின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்.
இதேபோல், ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸாவும் எனக்கு எதிராக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணத்தை கட்சிக்குள் பரவவிட்டுள்ளதாக எனக்கெதிரான தவறான குற்றச்சாட்டை அப்போது தெரிவித்தார். அதற்கு உகந்த ஆதாரங்கள் கூட இல்லை. சிர்ஸாவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பிரபல ஹிந்தி நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com