தெற்கு தில்லி புதிய மேயர் பதவி ஏற்பு

தெற்கு தில்லி மாநகராட்சி மேயராக கமல்ஜீத் ஷெராவத், துணை  மேயராக கைலாஷ் சங்க்லா ஆகியோர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்.

தெற்கு தில்லி மாநகராட்சி மேயராக கமல்ஜீத் ஷெராவத், துணை  மேயராக கைலாஷ் சங்க்லா ஆகியோர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்.
தெற்கு தில்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 104 வார்டுகளில் 70 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 16 வார்டுகளிலும், காங்கிரஸ் 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து தெற்கு தில்லி மாநகராட்சியின் முதலாவது கூட்டம் சிவிக் சென்டரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பின்னர், துவாரகா (பி) வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் கமல்ஜீத் ஷெராவதின் பெயரை மேயர் பதவிக்கும், கைலாஷ் சங்க்லா பெயரை துணை மேயர் பதவிக்கும் பாஜக உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.
தெற்கு தில்லி மாநகராட்சியில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், மேயர், துணை மேயர் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் நிறுத்தவில்லை.
இதையடுத்து கமல்ஜீத் ஷெராவத், கைலாஷ் சங்க்லா ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டனர்.
நிலைக்குழு தேர்வு: இதேபோல, தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவராக பாஜக உறுப்பினர் பூபேந்தர் குப்தா, உறுப்பினர்களாக ஷீகா ராய், நந்தனி சர்மா, துள்சி ஜோஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தெற்கு தில்லி மாநகராட்சித் தேர்தலில் துவாரகா (பி) வார்டில் போட்டியிட்ட கமல்ஜீத் ஷெராவத் 14,613 வாக்குகள் பெற்று, ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷ்மா பன்சலை 9,866 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார். கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர்  தேர்தல் மே 22 -ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

"மின்னாளுகைக்கு முன்னுரிமை'
தெற்கு தில்லி மாநகராட்சியில் மின்னாளுகைக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று அதன் புதிய மேயர் கமல்ஜீத் ஷெராவத் தெரிவித்தார். மேயர் பதவியை ஏற்ற பிறகு செய்தியாளர்களிடம் கமல்ஜீத் ஷெராவத் கூறுகையில்,  "தெற்கு தில்லி மாநகராட்சியில் தூய்மைத் திட்டங்களுக்கும், மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் மின்னாளுகை திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குப்பைகள் அள்ளுவதற்கும், தெரு, சாலைகளை தூய்மையாக வைத்திருக்கவும் கூடுதலான இயந்திரங்களைக் கொண்டு குப்பை மேலாண்மை மேம்படுத்தப்படும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கும் முன்னுரிமை அளிப்பேன். பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான "டிஜிட்டல்  இந்தியா' திட்டத்தை வலுப்படுத்த மாநகராட்சி சேவைகள் அனைத்தும் மின்னாளுகை  திட்டத்தில் இணைக்கப்படும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்து  ஊழலுக்கான வாய்ப்புகள் குறையும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com