கட்சி எம்எல்ஏக்களை பொம்மை போல பயன்படுத்துகிறார் கேஜரிவால்: பாஜக எம்எல்ஏ சிர்ஸா குற்றச்சாட்டு

தனது பிரச்னைகளுக்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பொம்மைகளாக முதல்வர் கேஜரிவால் பயன்படுத்தி வருவதாக தில்லி பாஜக எம்எல்ஏ மஞ்ஜிந்தர் சிங் சிர்ஸா குற்றம்சாட்டினார்.

தனது பிரச்னைகளுக்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பொம்மைகளாக முதல்வர் கேஜரிவால் பயன்படுத்தி வருவதாக தில்லி பாஜக எம்எல்ஏ மஞ்ஜிந்தர் சிங் சிர்ஸா குற்றம்சாட்டினார்.
அண்மையில் தில்லி ரஜௌரி கார்டன் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மஞ்ஜிந்தர் சிங் சிர்ஸா பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஒருவரிடமிருந்து ரூ.7 கோடி லஞ்சம் கேட்டதாக தனக்கு தகவல் கிடைத்தது என்று மஞ்சிந்தர் சிங் சிர்ஸா புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, சிர்ஸாவுக்கு எதிராக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் சிர்ஸா சனிக்கிழமை கூறியதாவது:
கேஜரிவால் தனது பிரச்னைகளுக்காக தனது எம்எல்ஏக்களை பொம்மைகளாகப் பயன்படுத்தி வருகிறார். என் மீது தில்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடுத்துள்ள அவதூறு வழக்கு இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
தில்லிவாசிகளின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் தனது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை பொம்மைகள் போல முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பயன்படுத்தி வருகிறார்.
முதல்வர் கேஜரிவால், சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் நான் சுமத்திய குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருக்கிறேன். மிகவும் ஊழல்வாதிகளான இருவரும் மக்கள் முன்பாகவும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
பொதுப்பணித் துறை ஒப்பந்த பணிகளுக்காக போலியாக தயாரிக்கப்பட்ட ரசீதுகளை பயன்படுத்தி அதன் பேரில் தொகை வழங்குவதற்கு தனது உறவினரின் 'மோசடி நிறுவனங்களை' முதல்வர் கேஜரிவால் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஹவாலா பணப் பரிவர்த்தனை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை போன்ற மோசடியில் முதல்வர் கேஜரிவால் ஈடுபட்டுள்ளது உறுதியாகிறது. இந்த விவகாரத்தில் கேஜரிவால் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
நாட்டிலேயே ஊழல், அவதூறு விவகாரங்களில் மிக அதிகமான வழக்குகளைச் சந்தித்து வரும் ஒரே அரசியல்வாதி கேஜரிவால்தான். அந்த வழக்குகளை எதிர்கொள்ள அவர் தயங்கி வருகிறார். நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளாமல் இருக்க பல்வேறு காரணங்களைக் கூறி வழக்குகளை அவர் இழுத்தடித்து வருகிறார். நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து அரவிந்த் கேஜரிவால் நீண்ட காலம் விலகியிருக்க முடியாது. மக்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய கேஜரிவால் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என்றார் சிர்ஸா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com