ஐடிஓ - கஷ்மீரி கேட் "ஹெரிட்டேஜ் லைனில்' மெட்ரோ ரயில் சேவை: நாளை தொடக்கம்

வரலாற்றுப் பாரம்பரிய இடங்கள் அமைந்துள்ள ஐடிஓ - கஷ்மீரி கேட் "ஹெரிட்டேஜ்' வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (மே 28) தொடங்க உள்ளது.

வரலாற்றுப் பாரம்பரிய இடங்கள் அமைந்துள்ள ஐடிஓ - கஷ்மீரி கேட் "ஹெரிட்டேஜ்' வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (மே 28) தொடங்க உள்ளது.
தில்லியின் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் புதிய வழித்தடங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தில் ஐ.டி.ஓ. (வருமான வரித் துறை அலுவலகம்) சந்திப்பு முதல் மண்டி ஹவுஸ், ஜன்பத் ஆகிய ரயில் நிலையங்கள் உள்பட சென்ட்ரல் செக்ரடேரியேட் முதல் ஐ.டி.ஓ. வரையிலான பகுதியில் தற்போது ரயில் சேவை நடைபெற்று வருகிறது.
 5.17 கி.மீ. தூரம்: இந்நிலையில், 5.17 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஐ.டி.ஓ. முதல் கஷ்மீரி கேட் வரையிலான மெட்ரோ ரயில் வழித் தடப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரயில் பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பாக இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிக்னலிங், கட்டுமானம், பொறியியல் ஆய்வுக்காக மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரின் அனுமதியைப் பெறும் வகையில் உரிய ஆவணங்களை தில்லி மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் வழங்கியது.
பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: இதையடுத்து, கடந்த வாரம் இரு தினங்கள் ஐ.டிஓ. - கஷ்மீரி கேட் ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கெண்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் வணிக ரீதியில் ரயில்களை இயக்குவதற்கு வியாழக்கிழமை அவர் அனுமதி அளித்தார். இதன்படி, வரும் 28-ஆம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
 இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அனூஜ் தயாள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தற்போது ஐ.டி.ஓ. முதல் ஃபரீதாபாத் வரையிலான "வயலட் லைன்' வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வழித்தடம் கஷ்மீரி கேட் வரை நீட்டிக்கப்பட உள்ளது. பழைய தில்லியில் உள்ள தில்லி கேட், ஜாமா மசூதி, செங்கோட்டை (ரெட் ஃபோர்ட்) ஆகிய மூன்று புதிய ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் செயல்படத் தொடங்க உள்ளன.
பாரம்பரிய இடங்கள்: தரைக்கு அடியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையங்கள் அருகே செங்கோட்டை, ஜாமா மசூதி, தில்லி கேட் போன்ற பாரம்பரிய வரலாற்று இடங்கள் அமைந்துள்ளன. இந்த ரயில் சேவை மூலம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கனாட் பிளேஸ், ஜன்பத், சென்ட்ரல் செக்ரடேரியேட், ஃபரீதாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு மெட்ரோ ரயில்களில் சென்று வரலாம். மேலும், சாந்தினி சௌக், சௌரி பஜார் ரயில் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
17-ஆவது நூற்றாண்டின் இடைக் காலத்தில் முகலாயப் பேரரசர் ஷாஜகான்,  செங்கோட்டையுடன் கூடிய "ஷாஜஹானாபாத்' நகரை உருவாக்கினார். தற்போது அந்தப் பகுதியில் உள்ள பாரம்பரிய இடங்கள் இந்த ஐ.டிஓ. - கஷ்மீரி கேட் வழித்தட ரயில் சேவை மூலம் இணைக்கப்பட உள்ளது.
தொடக்க விழா:  இந்த வழித்தடத்தில் ரயில் சேவைக்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையடுத்து, நண்பகல் 12 மணி முதல் ஐ.டி.ஓ. - கஷ்மீரி வழித்தடத்தில் பொதுமக்களுக்கான ரயில் சேவை வர்த்தக ரீதியில் தொடங்கும் என்றார் அனூஜ் தயாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com