தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக ஜி.எச். ரிஸ்வி பொறுப்பேற்பு

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக கயோருல் ஹஸன் ரிஸ்வி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக கயோருல் ஹஸன் ரிஸ்வி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையொட்டி, தில்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள லோக் கல்யாண் பவன் கட்டடத்தில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் அவர் தமது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சிறுபான்மையினரின் நலன், மேம்பாட்டுக்காக ஆணையம் பணிகளை மேற்கொளும்' என்றார்.
ஜி.எச்.ரிஸ்வி கலைப் பிரிவில் பட்டமும், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோவும் பெற்றவர். உத்தர பிரதேச சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த அவர், சமூகப் பணிகளில் ஆர்வமுடன் பணியாற்றி வருபவர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நெசவாளர்கள், பீடித் தொழிலாளர்களின் பணிச்சூழல், அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக அவர் பாடுபட்டார். அதேபோன்று, சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் பாடுபட்டவராகவும் அறியப்படுகிறார்.  
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்பு ஆட்சியில் இருந்த போது, அரசியலமைப்பு அந்தஸ்து கொண்ட தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மூன்று ஆண்டுகள் கொண்ட அவர்களது பதவிக் காலம் 2015, செப்டம்பர் 9, மற்றும் கடந்த மார்ச் 9-ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஆணையத்தின் நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதாக காங்கிரஸ், சமாஜவாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், ஏழு நிர்வாகிகளுக்கான நியமன அறிவிப்பை மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக கேரள பாஜக தலைவர் ஜார்ஜ் குரியன், மகராஷ்டிர முன்னாள் அமைச்சர் சுலேகா கும்பரே, குஜராத்தை சேர்ந்த ஜெயின் சமுதாயத்தின் சுனில் சிங்வி, உத்வதா அதோர்னன் அஞ்சுமன் ஆலயத் தலைமைப் பூஜாரி வதா தஸ்துர்ஜி குர்ஷித் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2014-இல் இந்த ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது ஆணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி நியமிக்கப்படுவது மரபாக இருந்தது.
 இந்நிலையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் நிர்வாகிகள் அனைவரும் அரசுப் பணி வகிக்காத, சமூகப் பொது வாழ்வில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com