கண்காட்சியில் 3,100 அரங்குகள்!

தில்லியில் உள்ள பிரகதி மைதானில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 37-ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் (ஐஐடிஎஃப்) தமிழகம்

தில்லியில் உள்ள பிரகதி மைதானில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 37-ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் (ஐஐடிஎஃப்) தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் சார்பில் 3,100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடக்க நாளான செவ்வாய்கிழமை  கண்காட்சியைப் பார்வையிட் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. நவம்பர் மாதம் 27- ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், முதல் நான்கு நாள்களில் வர்த்தகப் பார்வையாளர்கள் மட்டுமே பார்வையிட முடியும். 18-ஆம் தேதியில் இருந்து, பொதுமக்கள் காலை 9.30 மணியில் இருந்து மாலை 7.30 மணி வரையிலும் கண்காட்சியைப் பார்வையிடலாம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் தினம்தோறும் சுமார் 1.5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு குறைவான அளவு இடமே கண்காட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்,  தினம்தோறும் 1 லட்சம் பார்வையாளர்கள் வரை மட்டுமே வருவார்கள் என  எதிர்பார்கப்படுகிறது.
இது தொடர்பாக ஐடிபிஓ அதிகாரி கூறியதாவது: பிரகதி மைதானில்  சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கடந்த ஆண்டைவிடக் குறைந்தளவு அரங்குகளிலேயே  கண்காட்சி நடைபெறுகிறது.  
மொத்தம்  8 நிரந்தரஅரங்குகளிலும், 6 தாற்காலிக அரங்குகளிலும் கண்காட்சி நடைபெறுகிறது. வெளிநாட்டு அரங்குகளுக்கு 3,000 சதுர அடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1,100 சதுர அடி கூடுதலாகும் என்றார் அவர்.
தமிழக அரங்கை: கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை மாநிலச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர் செவ்வாயாகிழமை பார்வையிட்டார். மத்திய அரசின் அரங்குகளை அந்தந்தத் துறைகளின் தலைமை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். தில்லி தொழில் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தில்லி அரங்கைத் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ், மூத்த அதிகாரிகள் உள்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து போலீசார் அறிவுரை:  18- ஆம் தேதி முதல் பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளதால், கண்காட்சி நடைபெறும் பிரகதி மைதானத்தைச் சுற்றியுள்ள இடங்களில்  போக்குவரத்து நெரிசல் கடுமையாக  ஏற்படும் என எதிர்பார்ப்பதாக தில்லி போக்குவரத்துப் போலீசார் தெரிவித்தனர். இதனால்,  மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி போக்குவரத்துக் காவல் துறை இணை ஆணையர் கரீம் பட்நாகர் கூறியதாவது:   
தினம்தோறும்  சுமார் ஒரு லட்சம் மக்கள் கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே, மதுரா ரோடு, பைரோன் மார்க், ரிங் ரோடு, ஷெர்ஷா ரோடு, புராணா கிலா ரோடு ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.
கண்காட்சிக்கு செல்லாத மக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரகதி மைதானுக்கு அருகில் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த அனுமதிக்க மாட்டோம். சட்டத்துக்குப் புறம்பாக நிறுத்தப்படும் வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நேஷனல் ஸ்டேடியத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.600 வசூலிக்கப்படும். மதுரா ரோடில் அதிகளவு பாதசாரிகள் நடமாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால்   மதுரா ரோடில்  உள்ள பாதசாரிகள் மேம்பாலத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
பார்கிங் வசதிகள்:  பார்வையாளர்கள் தங்களது வாகனங்களை  பைரோன் சாலையில் உள்ள பைரோன் மந்திர் பகுதி,  இந்தியா கேட் அருகே, தில்லி மிருக்கக் காட்சிச் சாலை ஆகிய இடங்களில் நிறுத்தலாம். விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பகவான் தாஸ் ரோடிலும், 4 மணிக்குப் பிறகு திலக் ரோடிலும் வாகனங்களை நிறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை: தில்லியில் உள்ள பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்களில் வர்த்தகக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கான கட்டண டிக்கெட்டுகள் விற்பனை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com