3,000 சாதுக்கள் பங்கேற்கும் 3 நாள்  ஹிந்து மாநாடு:உடுப்பியில் நாளை தொடக்கம்

ஹிந்து மதத் தலைவர்கள், 3,000 சாதுக்கள் பங்கேற்கும்  "தரம் சன்சத்' என்ற மாநாடு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) தொடங்குகிறது என்று விஷ்வ ஹிந்து

ஹிந்து மதத் தலைவர்கள், 3,000 சாதுக்கள் பங்கேற்கும்  "தரம் சன்சத்' என்ற மாநாடு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) தொடங்குகிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 25)  வரை நடைபெறும் இந்த மாநாட்டில் மத்வாச்சார்யா மடத்தின் பீடாதிபதி சுவாமி விஸ்வேஸ் தீர்தர் ஜீ, புகழ் பெற்ற தர்மஸ்தாலா கோயிலின் தர்மகர்த்தா வீரேந்தர் ஹெக்டே, சுவாமி ராகுல் கோதி, ஸ்ரீ திலீப் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு தொடர்பாக தில்லியில் புதன்கிழமை  விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச இணைச் செயலர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
கர்நாடக மாநிலத்தில் ஆன்மிகத்தின்  தலைநகர் என வியந்து போற்றப்படும்  உடுப்பி நகரில்  "தரம் சன்சத்' என்ற ஹிந்து  மாநாடு  வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. வைஷ்ணவம், சைவம், வீர சைவம் உள்பட ஹிந்து மதத்தின் அனைத்துப் பிரிவுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 3,000 சாதுக்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல், பசு வதையைத் தடுத்தல், தீண்டாமை ஒழிப்பு ஆகிய முக்கியமான 3 விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
2018- இல் ராமர் கோயில்:  2018- ஆண்டிற்குள் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயிலைக் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என மாநாட்டில்  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். ராம ஜென்ம பூமியை அமைப்பதற்கான நிலத்தைப் பெறுவதற்கான வழிகளையும் ஆராய உள்ளோம்.  வாழும் கலையின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ராம ஜென்ம பூமி விஷயத்தில்  மத்தியஸ்தம் செய்வதில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். 
அயோத்தியில் ராமர் கோயிலையும், லக்னௌவில் மசூதியையும் கட்டலாம் என்று  உச்ச நீதிமன்றத்தில் ஷியா வக்ஃபு வாரியம் கூறியுள்ளது.  அந்த அமைப்பின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமல் அது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை. 
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குப் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் ஆதரவாக  உள்ளனர். ராமர் கோயிலைக் கட்டுவதற்கு  அனைத்து முஸ்லிம் மக்களும் முன்வந்து ஆதரவு தர வேண்டும்.  ஹிந்துத்துவத்தின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு பெற்றுள்ளது.  இந்தியாவின் முக்கியமான கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. தமிழ் நாட்டு மக்களும் ராமர் கோயில் கட்ட தங்களின் பூரண ஆதரவைத் தருவார்கள் என நம்புகிறேன் என்றார்  சுரேந்திர ஜெயின்.
தில்லி நார்த் அவன்யூவில் நடைபெற்ற இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது,  விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் தில்லி மாநிலச் செயலர் பஜன் சிங்,  பஜ்ரங்தள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com