ஜம்மு, காஷ்மீர் போக்குவரத்து கழக அலுவலகத்தை காலி செய்ய கெடு: தில்லி உயர் நீதிமன்றம்

தில்லியில் உள்ள ஜம்மு, காஷ்மீர் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் (ஜேகேஎஸ்டிசி) அலுவலகத்தை மூன்று மாதங்களில் காலி செய்து

தில்லியில் உள்ள ஜம்மு, காஷ்மீர் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் (ஜேகேஎஸ்டிசி) அலுவலகத்தை மூன்று மாதங்களில் காலி செய்து தில்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜேகேஎஸ்டிசி நிர்வாகத்திற்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாக மறுமேம்பாட்டுப் பணிக்காக சம்பந்தப்பட்ட இடத்தை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: மத்திய தில்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள ஜம்மு, காஷ்மீர் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் (ஜேகேஎஸ்டி)  அலுவலகத்தை காலி செய்யுமாறும், அதற்கான வேறு இடத்தை பெற்றுக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் 1997-இல் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மேற்கோள்காட்டி  அலுவலகத்தை காலி செய்யுமாறு தில்லி உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஜேகேஎஸ்டிசி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை  தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது,  ஜம்மு, காஷ்மீர் மாநிலப் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில்  வழக்குரைஞர் சுமீத் வர்மா ஆஜராகி, "ஜம்மு, காஷ்மீர் மாநிலப் போக்குவரத்துக் கழகம் சம்பந்தப்பட்ட இடத்தை 50 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது.  வைஷ்ணவி தேவி,  அமர்நாத் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் இந்த அலுவலகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.  மேலும்,  பேருந்துகளை நிறுத்திவைப்பதற்கான இடமாகவும் பயன்பட்டு வருகிறது.   வேறு இடம் அளிப்பதாக  இருந்தால் இடத்தைக் காலி செய்யவும் தயாராக ஜேகேஎஸ்டிசி உள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும்' என்றார்.
அப்போது,  உயர் நீதிமன்ற நிர்வாகத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விராஜ் ததர், "தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தை மறுமேம்பாடு செய்வதற்காக சம்பந்தப்பட்ட இடம் தேவைப்படுகிறது. 135 நீதிமன்ற அறைகளை 300 அறைகளாக மாற்றப்பட வேண்டியுள்ளது.  மத்தியஸ்த மையம் அமைக்க சம்பந்தப்பட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.
 இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு  உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரா பட்,  சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: 
இன்றைய தேதி நிலவரப்படி, நீதிமன்றங்களின் எண்ணிக்கை போதிய அளவு இல்லை. இதனால்,  தில்லியில் மாவட்ட நீதிமன்றங்களில் உரிய நீதிபதி இடங்களை நிரப்ப உயர் நீதிமன்றத்தால் இயலவில்லை. இதனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி,  ஜேகேஎஸ்டிசி நிர்வாகம் அதன் இடத்தை காலி செய்து மூன்று மாதங்களுக்குள் தில்லி அரசிடம் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாக  மறுமேம்பாட்டுப் பணிக்காக ஒப்படைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com