தெற்கு தில்லி மாநகராட்சி கூட்டத்தில் அமளி: ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கட்டடத் துறையில் நடைபெறுவதாகக்  கூறப்படும் ஊழல் விவகாரம் தொடர்பாக  தெற்கு தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

கட்டடத் துறையில் நடைபெறுவதாகக்  கூறப்படும் ஊழல் விவகாரம் தொடர்பாக  தெற்கு தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டத்திலிருந்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 
தெற்கு தில்லி மாநகராட்சியின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கட்டடத் துறையின் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல், முறைகேடுகள் குறித்த பிரச்னையை எழுப்பினர். 
மேயர், ஆணையர் இருக்கைகள் அருகே சென்று அவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இது குறித்து ஆம் ஆத்மி கவுன்சிலர் ரமேஷ் மாட்டியாலா கூறுகையில், "இடிக்கப்பட்ட பகுதிகளில் கட்டடப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்களை அறிய விரும்புகிறோம். இது தொடர்பாக கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கட்டடத் துறை, தங்களிடம் பதிவு எதுவும்  இல்லை எனத் தெரிவிக்கிறது' என்றார்.
ஆம் ஆத்மியின் மற்றொரு கவுன்சிலர் ஜெர்னைல் சிங் கூறுகையில், "அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கட்டடத் துறை தெளிவான பதில் அளிக்கவில்லை. மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்தும், பின்னர் அனுமதிக்கப்பட்ட கட்டடங்கள் தொடர்பான விவரங்களும் கட்டடத் துறையிடம் இல்லை' என்றார்.
அவைத் தலைவர்: ஆம் ஆத்மி கவுன்சிலர்களின் செயல்பாடுகளுக்கு தெற்கு தில்லி மாநகராட்சியின் அவைத் தலைவர் ஷீகா ராய் அதிருப்தி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மாநகராட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிக் கவுன்சிலர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.  பொறுப்பற்ற செயல்களால் கூட்டத்தின் நேரத்தை வீணடித்தனர். கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது ஜனநாயக விரோதமானது' என்றார்.
மேயர்: இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் கூறுகையில், "கட்டடத் துறை அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லையென்றால், உரிய பதில் பெறும் வகையில் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் அனுமதித்திருக்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் கவுன்சிலர் அபிஷேக் தத் கூறுகையில், "ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பொறுமை காத்திருந்தால், அவர்களுக்குத் தேவையானப் பதில் கிடைத்திருக்கும். அதைத் தவிர்த்து வெளிநடப்புச் செய்வது பிரச்னைக்கு தீர்வாகாது. 
மாநகராட்சிக் கூட்டத்தில் ஆரோக்கியமான விவதம் நடைபெறுவது அவசியம்' என்றார். இதே விவகாரம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com