பயிர்க்கழிவு எரிக்கப்படும் பிரச்னைக்கு செயல்படுத்தக் கூடிய தீர்வு காணுங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பயிர்க்கழிவுகள் எரிக்கப்படும் பிரச்னைக்கு செயல்படுத்தக்கூடிய தீர்வைக் காண மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பயிர்க்கழிவுகள் எரிக்கப்படும் பிரச்னைக்கு செயல்படுத்தக்கூடிய தீர்வைக் காண மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பயிர்க்கழிவுகளை எரிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் விக்ராந்த் டோன்கட் தொடுத்த வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு புதன்கிழமை விசாரித்து பிறப்பித்த உத்தரவின் விவரம்:
பயிர்க்கழிவுகளைக் கொண்டுசென்று மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளாக பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து 28-ம் தேதி ஆலோசனை  கூட்டம் நடத்தப்பட வேண்டும். 
இந்தக் கூட்டத்தில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளின் வேளாண்துறை முதன்மைச் செயலர்கள், மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் செயலர், மத்திய எரிசக்தித் துறையின் கூடுதல் செயலர், பெல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் தலைமை இயக்குநர், என்டிபிசி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஆகியோர் பங்கேற்க வேண்டும்.
தேசிய அனல் மின் நிலையங்களில், பயிர்க்கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் இயந்திரங்களை அமைத்து மாநில அரசுகளே செயல்படுத்த முடியுமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.
இல்லையென்றால், தனியார் பங்களிப்புடனும் இந்த இயந்திரங்களை அமைத்து பயிர்கழிவுகளை எரிசக்தியாக மாற்றலாம். மேலும், விவசாய நிலங்களில் இருக்கும் பயிர்க்கழிவுகளை எடுக்கும்போது அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.
இதுதொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் டிசம்பர் 6-ம் தேதி தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனிடையே, தேசிய அனல் மின் நிலையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "வட இந்தியாவில் 6 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு தினம்தோறும் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பயிர்க்கழிவுகள் தேவைப்படும்.
ஆனால் பயிர்க்கழிவுகளை அப்படியே எரிபொருளாக பயன்படுத்த முடியாது. அதனை "பெல்லட்' (இருக்கமாக பெட்டி வடிவில் மாற்றி) முறையில் பயன்படுத்தலாம். ஆனால் அந்த பயிர்க்கழிவுகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிக்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு கடைப்பிடிக்கப்படவில்லை.
இதையடுத்து, இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகளின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com