மழைநீர் சேகரிப்பு அறிக்கை தாக்கலில் தாமதம்: தில்லி அரசுக்கு என்ஜிடி கண்டிப்பு

மழைநீர் சேகரிப்பு தொடர்பான அறிக்கை தாக்கலில் தாமதம் ஏற்பட்டதால் தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது.

மழைநீர் சேகரிப்பு தொடர்பான அறிக்கை தாக்கலில் தாமதம் ஏற்பட்டதால் தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது.
தில்லி மெஹ்ரோலி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் ஜெயின். இவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.  அதில், "100 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள அனைத்து அரசுக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது,  தில்லியில் உள்ள அரசுக் கட்டடங்கள்,  பாலங்கள், மேம்பாலங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளதா மற்றும் செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்த நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவர்-நீதிபதி ஸ்வதந்தர் குமார்,  நீதிபதி ஜாவத் ரஹீம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  நிலவர அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்யாததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு வருமாறு: மழைநீர் சேகரிப்பு வசதி தொடர்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு பலமுறை உத்தரவு பிறப்பித்தும் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடைசி வாய்ப்பாக ஒரு வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது.  அப்போதும் அறிக்கை தாக்கல் செய்யவில்லையெனில் தில்லி அரசின் சம்பந்தப்பட்ட செயலர் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
மேலும், இந்த வழக்கில் தில்லி வளர்ச்சி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கைக்கு மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு  நீதிபதிகள் அமர்வு தள்ளிவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com