தில்லி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம்

தலைநகரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தில்லி அரசே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தலைநகரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தில்லி அரசே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் சூழலில், நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு முதல் முறையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தில்லியில் குறிப்பாக ஆம் ஆத்மி அரசு மதிப்பு கூட்டு வரியை (வாட்) உயர்த்தியதே காரணம் எனக் கூறலாம். இதனால், பெட்ரோல் மீதான கலால் வரி, வாட் வரி என 102.42 சதவீதம் அளவுக்கும், டீசல் மீதான கலால் வரி, வாட் வரி என 226.02 சதவீதம் அளவுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தலைநகரில் நவம்பர் 14-ஆம் தேதி நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 70.38, டீசல் லிட்டர் ரூ. 51. 76 என்ற வீதத்தில் விற்பனைச் செய்யப்படுகிறது. இவற்றின் விலை வரிகள் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 58.92, டீசல் லிட்டருக்கு ரூ. 40.42 எனக் கணக்கிடப்படுகிறது.
தலைநகரில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 27 சதவீதமும், டீசல் மீது லிட்டருக்கு 16.75 சதவீதமும் வாட் வரியாக விதிக்கப்படுகிறது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், 'அரசு நிர்வாகத்தை வரிகள் இல்லாமலே நிர்வகிக்க முடியும், ஆட்சிப் பொறுப்பேற்றால் வரி விதிப்பு முறையை ஒழிப்பேன்; லோக்பாலை அமைப்பேன்' என்று அரவிந்த் கேஜரிவால் கூறினார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மோடியைப் போல தில்லிவாசிகள் மீது மறைமுக வரிகளை விதித்துள்ளார். தலைநகர் தில்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் மாநகர் முழுவதும் செப்டம்பர் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். 10 லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெறும் வகையில் இயக்கமும் நடத்தப்படும் என்றார் அஜய்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com