ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு : ஆம் ஆத்மி மூத்த தலைவரின் மனு மீது உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா தாக்கல் செய்த மனு மீது செப்டம்பர் 25-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா தாக்கல் செய்த மனு மீது செப்டம்பர் 25-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகித்த தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அவரது கட்சியைச் சேர்ந்த 5 மூத்த தலைவர்கள் மீது அருண் ஜேட்லி அவதூறு வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராகவ் சத்தா தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த தில்லி உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக அருண் ஜேட்லி பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், ராகவ் சத்தா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராகவ் சத்தா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர், 'விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று நான் உயர் நீதிமன்றத்தில் கோர வில்லை. ஆனால் நான் விசாரணை நீதிமன்றத்தின் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறியதாக உயர் நீதிமன்றமே தெரிவித்து அதற்கு அனுமக்க மறுத்துவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் மாதத்துக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது என்று கூறினார்.
இதற்கு அருண் ஜேட்லி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லூத்ரா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: இந்த வழக்கு தொடர்புடைய மனுதாரர்கள் அனைவரும் உச்ச நீதிமன்ற உத்தரவுடன் செப்டம்பர் 18-ம் தேதி உயர் நீதிமன்ற முன் ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 19-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். செப்டம்பர் 25-ம் தேதிக்குள் ராகவ் சத்தாவின் மனு மீது உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ராகவ் சத்தாவின் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் முன்கூட்டிய நடத்த வேண்டும் என்பதைத்தான் நீதிபதிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது' என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com