ராணுவ வீரர்களை அறைந்த பெண்: விடியோ வெளியானதால் கைதாகி விடுதலை

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் காரை தாறுமாறாக ஓட்டியதை தட்டிக் கேட்ட 2 ராணுவ வீரர்களை திட்டியதுடன், அவர்களது கன்னத்தில் அறைந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் காரை தாறுமாறாக ஓட்டியதை தட்டிக் கேட்ட 2 ராணுவ வீரர்களை திட்டியதுடன், அவர்களது கன்னத்தில் அறைந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
ராணுவ சுபேதாராக இருக்கும் மகாவீர் சிங் ராத்தோர், கடந்த 13-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, மகாவீர் சிங் கடந்த 9-ஆம் தேதி ராணுவ வீரர்கள் 5 பேரை ஹஸரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் விடுவதற்காக அவர்களை ராணுவ டிரக் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த வாகனத்தை ஆரிஃப் கான் என்ற ராணுவ ஓட்டுநர் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில், அவர்களது வாகனம் ரஜோக்ரி மேம்பாலம் அருகே வரும்போது கார் ஒன்று அவர்களை முந்திக் கொண்டு முன்னால் சென்றது. பின்னர் அந்தக் கார் வழிவிடாமல் தாறுமாறாகச் சென்றது. ராணுவ வாகன ஓட்டுநர் ஆரிஃப் கான், ஒலி எழுப்பி வழி கேட்டபோதும், அந்த வாகனம் அவ்வாறே சென்றது.
பின்னர், அவர் அந்தக் காரை கடக்க முயன்றபோதும் இருபுறமும் வழிவிடாமல் அந்தக் கார் அவ்வாறே தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து ஓரிடத்தில் கார் நின்றபோது, சூழ்நிலை என்ன என்பதை அந்தக் காரில் இருப்பவர்களுக்கு விளக்குமாறு கூறி ஓட்டுநர் ஆரிஃப் கானை அனுப்பினார் மகாவீர் சிங்.
அந்தக் காரை குருகிராமைச் சேர்ந்த ஸ்மிருதி கல்ரா (44) என்ற பெண் ஓட்டி வந்துள்ளார். ஆரிஃப் கான் அந்தக் கார் அருகே சென்று ஸ்மிருதியிடம் பேச முயன்றபோது, அவர் ஆரிஃப் கானை திட்டியதுடன், அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். சூழ்நிலையை கட்டுப்படுத்தும் விதமாக ஆரிஃப் கான் மீண்டும் வந்து டிரக் வாகனத்தில் ஏறிய பிறகும், ஸ்மிருதி தனது வாகனத்தில் இருந்து இறங்கி வந்து அவரை திட்டினார்.
அத்துடன், டிரக் வாகனத்தின் அருகே வந்து அதன் கண்ணாடியில் அடித்துள்ளார். அப்போது, சுபேதார் மகாவீர் சிங் கீழிறங்கி தங்களது தவறு என்ன என்று கேட்டுள்ளார். அப்போதும் ஸ்மிருதி எதையும் கேட்காமல் அவர்களை திட்டியதுடன், மகாவீர் சிங்கையும் இரு முறை அறைந்தார்.
இந்த சம்பவத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அங்கு பொதுமக்கள் கூடியதை கண்ட ஸ்மிருதி, அங்கிருந்து தனது காரை ஓட்டிச் சென்றார். இதனிடையே, இந்தச் சம்பவத்தை மகாவீர் சிங் உடன் வந்த ராணுவ வீரர் ஒருவர் தனது செல்லிடப்பேசியில் விடியோ பதிவு செய்திருந்தார்.
அதை போலீஸாரிடம் ஒப்படைத்து ஸ்மிருதிக்கு எதிராக கடந்த 13-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குருகிராமில் வசித்து வந்த ஸ்மிருதி அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ஸ்மிருதி ஹோம் சைன்ஸ் பயின்றவர் என்பதும், திருமணமான அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதும், அவரது கணவர் ராணுவ அதிகாரியின் மகன் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்மிருதிக்கு, நீதிபதி லாவ்லீன் ஜாமீன் வழங்கினார். இதையடுத்து ஸ்மிருதி விடுவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com