அமில விற்பனையை முறைப்படுத்த சட்டம் இயற்றாதது ஏன்?: பாஜக

அமில விற்பனையை முறைப்படுத்த உரிய சட்டத்தை தில்லி அரசு இயற்றாதது ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

அமில விற்பனையை முறைப்படுத்த உரிய சட்டத்தை தில்லி அரசு இயற்றாதது ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
வடக்கு தில்லியில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டங்கிகளில் பெரும் அளவுக்கு அமிலம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, இஞ்சியை சுத்தம் செய்வதற்கு இதுபோன்ற அமிலங்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
காவல்துறை நடத்திய சோதனையில் மட்டும் 850 லிட்டர் அமிலம் கைப்பற்றப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் அமில விற்பனைக்குத் தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சட்டம் இயற்றவும் உத்தரவிட்டது. மேலும், முறையான ஏற்பாடுகளுடன், குறிப்பிட்ட சில்லறை விற்பனையாளர்கள் மட்டும் அமில விற்பனையை மேற்கொள்ளும் வகையில், உரிமம் வழங்குமாறும் அறிவுறுத்தியதுடன் நாள்தோறும் நடைபெறும் அமில விற்பனை குறித்த விவரங்களை உள்ளூர் காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை தில்லி அரசு அமில விற்பனை தொடர்பாக சட்டம் எதையும் இயற்றவில்லை. ஆனால், விஷச் சட்டம்-1919 -இன் மூலம் அமில விற்பனையை முறைப்படுத்தி வருகிறது. ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க உதவிக் கோட்டாட்சியர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இதுவரை அவர்கள் அபராதம் எதுவும் விதிக்கவில்லை. இதன் காரணமாக தில்லியில் தெருவுக்குத் தெரு அமிலம் விற்பனைக்குக் கிடைக்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அமில வீச்சு தொடர்பாக தில்லியில் சுமார் 30 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சங்கம் விஹார் பகுதியில், அமிலத்தை அருந்த இளைஞரை கட்டாயப்படுத்திய சம்பவம் வியாழக்கிழமை நடந்துள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சட்ட  விதிகளை தில்லி அரசு  உருவாக்காதது ஏன் என்றார் விஜேந்தர் குப்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com