டிஜிட்டல் கல்வி அறிவு இல்லாததால் முதியோர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

நவீன தொழில்நுட்பம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால் முதியோர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நவீன தொழில்நுட்பம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால் முதியோர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேசிய வளர்ச்சியில் அனைவரையும் பங்கேற்று, அதிகாரம் பெறச் செய்ய தொழில்நுட்ப கல்வி அறிவை (டிஜிட்டல் லிட்டரசி) அனைவரும் பெற வேண்டும் என்னும் நோக்கில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, அரசின் அனைத்துத் திட்டங்களும் கணினிமயமாக்கப்பட்டு, டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியில் கிடைத்துள்ள கணினி, செல்லிடப்பேசி, மடிக்கணினி உள்ளிட்டவற்றை இன்றைய இளம் தலைமுறையினர் கையாண்டு வருகின்றனர். ஆனால், லட்சக்கணக்கான முதியோர்கள் தொழில்நுட்பக் கருவிகளைக் கையாளாத நிலை உருவாகி வருகிறது. இதன் காரணமாக அவர்கள் ஒருவகையான புறக்கணிப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள 5 ஆயிரம் முதியோர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 85.8 சதவீதம் முதியோர் தங்களுக்கு போதுமான நவீன தொழில்நுட்பம், கணினி ஆகியவை குறித்த விழிப்புணர்வு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். நவீன தொழில் நுட்ப அறிவு இல்லாததால் தங்களுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக 74.9 சதவீதம் முதியோர்கள் தெரிவித்துள்ளனர். நவீன சமூகம் இணையத்தில் ஆளப்பட்டு வரும் சூழலில் நவீன தொழில்நுட்ப கல்லாமையால் சமூகத்தில் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக 82.4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நவீன தொழில் நுட்பத்தின் மொழியை கற்பதில் உள்ள சிக்கலால் குடும்பத்தில் உள்ள இளையோர் தங்களிடம் பேசுவதை தவிர்ப்பதாகவும் 85 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதே சமயம் ஆன்லைன் பண பரிமாற்றம் குறித்து அறிந்து கொள்ள 69.8 சதவீத முதியோர் ஆர்வம் காட்டுவதாகவும், அதில் 84.2 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 58.2 சதவீதம் பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கணினி அறிவை பெறும் வகையில் போதுமான வசதிகள் இல்லை என 51 சதவீதம் பேரும், கணினி அறிவு என்றால் என்னவென்றே தெரியாது என 44.6 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com