திட்டங்கள் தொடர்பான கருத்து: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

'திட்டங்களை தொடங்குவது மட்டுமின்றி, அவற்றை நிறைவேற்றவும் செய்கிறோம்' என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி

'திட்டங்களை தொடங்குவது மட்டுமின்றி, அவற்றை நிறைவேற்றவும் செய்கிறோம்' என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குதான், பிரதமர் மோடி திறப்புவிழா நடத்தியதாக கூறியுள்ளது.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 'நாங்கள் திட்டங்களைத் தொடங்குவது மட்டுமன்றி, அவற்றை நிறைவேற்றவும் செய்கிறோம்' என்று கூறினார்.
அவரது இந்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஒரு ஜனநாயக நாட்டில், அரசுகள் வரும்; போகும். ஒரு அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கும். அந்த திட்டத்துக்கு, அடுத்த அரசு திறப்பு விழா நடத்தும். திட்டங்கள் நிறைவேற்றம் என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அப்படியிருக்கும்போது, நாங்களே திட்டத்தைத் தொடங்கி, நாங்களே திறப்பு விழா நடத்துகிறோம் என்று கூறுவது முறையற்றது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி திறப்புவிழா நடத்தியிருக்கிறார். ஜம்மு-கத்ரா ரயில் வழித்தடம், மேகாலய ரயில் வழித்தடம், புரி நீர்மின் நிலையம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப் பாதை, கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சி மெட்ரோ, அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக நீளமான பாலம் ஆகிய திட்டங்கள், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. ஆனால், இத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அரசில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்ட ஒப்பந்தம் கூட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கையெழுத்தானதுதான் என்றார் ராஜீவ் சுக்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com