தர்யாகஞ்ச் சாலையோர புத்தகக் கடைகளை நிரந்தரமாக மூடத் திட்டம்?: வியாபாரிகள் கவலை

தில்லி தர்யாகஞ்ச் பகுதியில் சாலையோரங்களில் செயல்பட்டு வரும் புத்தக சந்தையை நிரந்தரமாக மூட மாநகராட்சி

தில்லி தர்யாகஞ்ச் பகுதியில் சாலையோரங்களில் செயல்பட்டு வரும் புத்தக சந்தையை நிரந்தரமாக மூட மாநகராட்சி அதிகாரிகள் முயற்சிப்பதாக புத்தக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தர்யாகஞ்சில் உள்ள நேதாஜி சுபாஷ் மார்க், ஆஷிஃப் அலி சாலை ஆகிய இடங்களில் உள்ள நடைபாதைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தக சந்தை செயல்படுவது வழக்கமாகும். இந்த நடைபாதை புத்தகச் சந்தை 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பட்ட புத்தகங்கள் இங்கு மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக நடைபாதை புத்தக சந்தையைத் திறக்க வடக்கு தில்லி மாநகராட்சி அனுமதி அளிக்கவில்லை. ஆசியான் மாநாடு, குடியரசு தினம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இக்கடைகளுக்கு தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆசியான் மாநாட்டையும் குடியரசுத் தினத்தையும் காரணமாகக் கூறி இந்த நடைபாதை புத்தகச் சந்தையை நிரந்தரமாக மூட மாநகராட்சி அதிகாரிகள் முயற்சிப்பதாக புத்தக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "குடியரசு தினம், ஆசியான் மாநாடு முடிந்தவுடன் நடைபாதையோரக் கடைகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக மாநகராட்சியிடம் இருந்து எந்தவித உறுதிமொழியும் கிடைக்கப்பெறவில்லை. ஆசியான் மாநாட்டையும் குடியரசுத் தினத்தையும் காரணமாக வைத்து இக்கடைகளை நிரந்தரமாக மூட மாநகராட்சி முயற்சிக்கிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது' என்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "இப்புத்தக சந்தையில் மாநகராட்சியிடம் முறையானஅனுமதி பெறாமல் பலர் புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சிலர் தொலைபேசி, சார்ஜர், காலணிகள் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகின்றனர். இக்கடைகள் அடையாளம் காணப்பட்டு தடை செய்யப்படும்' என்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், "நேதாஜி சுபாஷ் மார்க், ஆஷிஃப் அலி சாலை ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் புத்தக சந்தையால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படுகிறது. நடைபாதையை மட்டும் அல்ல; சாலையையும் ஆக்கிரமித்து புத்தகக் கடைகளை வைக்கின்றனர். இது தொடர்பாக காவல் துறை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றனர்.
இது தொடர்பாக பல்கலை., கல்லூரி மாணவர்கள் கூறுகையில், "ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நல்ல புத்தகங்களை இச்சந்தையில் குறைந்த விலையில் பெற முடியும். இங்கு அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும். மாணவர்கள் பலர் பல அரிய புத்தகங்களை வாங்கியுள்ளனர். இப்புத்தக சந்தை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இச்சந்தையை நிரந்தரமாக மூடினால் மாணவர்களுக்குப் பாதிப்பாக அமையும். எனவே, இப்புத்தக சந்தை தொடர்ந்து நடைபெற வேண்டும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com