மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 752 பேருக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக 25-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக 25-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு 752 பேருக்கு பட்டங்களை வழங்கினார். 
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், துணைவேந்தர் கி.பாஸ்கர் வரவேற்று, பல்கலைக்கழக ஆய்வறிக்கையை வாசித்தார். ஆளுநர் தலைமை வகித்து 752 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். இவர்களில் 665 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். எஞ்சிய 87 பேர்,  இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள். இவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த முறை ஒட்டுமொத்தமாக 46,219 பேர் பட்டம் பெற்றுள்ளனர்.
நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ரைஹானா பரீதாவுக்கு (பி.எஸ்சி. கணினி அறிவியல்) ஆதித்தனார் கல்லூரி வெள்ளி விழா பதக்கம் மற்றும் நஸீமா கம்ப்யூட்டர்ஸின் பதக்கம் வழங்கப்பட்டது. ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவி கெளரிக்கு (பி.ஏ. பொருளாதாரம்) சிவந்தி ஆதித்தனார் பதக்கம்,  எஸ்.ராமச்சந்திரன் பதக்கம் வழங்கப்பட்டது.
தெற்கு கள்ளிக்குளம் தட்சிணமாற நாடார் சங்க கல்லூரி மாணவர் நாடார் ஆல்வினுக்கு (பி.எஸ்சி. வேதியியல்) பி.என். அப்புசாமி பதக்கம், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பதக்கம் மற்றும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதக்கம் என 3 பதக்கங்கள் வழங்கப்பட்டன.  பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை செயலர் சுநீல் பாலிவால், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ரூ. 5 கோடியில் சூரிய ஒளி மின்திட்டத்துக்கு அடிக்கல்
பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்துக்கு ஆளுநர் அடிக்கல் நாட்டினார்.  5 ஏக்கர் நிலத்தில் நிறுவப்படவுள்ள இந்த சூரிய ஒளி மின் திட்டப் பணிகள் 3 முதல் 5 மாதங்களில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரவுள்ளது.  இதன் மூலம் ஆண்டுக்கு 15 லட்சம் யூனிட் மின்சாரம் கிடைக்கும்.  இந்தத் திட்டத்துக்கு செலவிடப்படும் தொகையை அடுத்த 7 அல்லது 8 ஆண்டுகளில் எடுத்துவிட முடியும்.
சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் 80 சதவீதம் பல்கலைக்கழக பயன்பாட்டுக்கும், 20 சதவீதம் பொது பயன்பாட்டுக்கும் வழங்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.

பேராசிரியர் பெயரில் பல்கலைக்கழகம் இயங்குவது பெருமை
உயர் கல்வித்துறை அமைச்சரும்,  பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் வாழ்த்திப் பேசியதாவது: திருநெல்வேலி மண்ணுக்கு எத்தனையோ சிறப்பு இருக்கிறது. வீரம் விளைந்த பூமி இது. கல்வி, சமூக சீர்திருத்தப் பணியிலும், திருநெல்வேலியின் பங்கு மிக முக்கியமானது. தமிழகத்தில் அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி. அந்த மாவட்டத்தையும் உள்ளடக்கியதுதான் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 77,008 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
பேராசிரியரான மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, ஒரு படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த தத்துவப் பேராசிரியரும்கூட. அவருடைய பெயரில் இந்தப் பல்கலைக்கழகம் இயங்கி வருவது அவருக்கு மட்டுமல்ல, இங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், கல்வி சமூகத்துக்கும் பெருமையாகும்.   மாணவர்களாகிய நீங்கள் அனைவரும்  வெற்றி பெறுவோம் என முழுமையாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கைதான் உங்களை உயர்த்தும். இன்றும் பட்டம் பெறுகின்ற நீங்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com