தாமிரவருணியில் கழிவு நீரை கலந்த மாநகராட்சியை கண்டித்து காங்கிரஸார் சாலை மறியல்

பாதாள சாக்கடை கழிவுநீரை தாமிரவருணியில் கலந்த மாநகராட்சியைக் கண்டித்து வண்ணார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதாள சாக்கடை கழிவுநீரை தாமிரவருணியில் கலந்த மாநகராட்சியைக் கண்டித்து வண்ணார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் திருநெல்வேலி மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து அடிக்கடி கழிவுநீர் தாமிரவருணி ஆற்றில் திறந்துவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.  
இந்த நிலையில்  கடந்த புதன்கிழமை மழை பெய்ததால்,  வண்ணார்பேட்டை கழிவுநீர் உந்து மையத்தில் இருந்து கடந்த இரண்டு நாள்களாக தாமிரவருணியில் கழிவு நீர் திறந்துவிடப்பட்டது. 
இதையடுத்து மாநகராட்சியைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீஸார், காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது மாநகராட்சி அதிகாரிகள் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக் கூறினர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிக்கு தகவல் கொடுத்த போலீஸார்,  சாலை மறியலில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது. 
சம்பவ இடத்துக்கு வந்த தச்சநல்லூர் மண்ட உதவி ஆணையர் சாந்தியிடம், காங்கிரஸ் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குப் பதிலளித்த சாந்தி, "மழை பெய்ததாலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மற்ற நீரையும் பாதாள சாக்கடையில் விடுவதன் காரணமாகவும் கழிவுநீர் உந்து மையத்துக்கு  அதிக அளவில் தண்ணீர்  வந்துவிட்டது. அதன் காரணமாவே இங்கிருந்து ஆற்றுக்கு தண்ணீரை திறந்துவிட்டோம். இனி அதுபோன்று நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம்' என்றார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சமாதானம் அடைந்தனர். எனினும் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com