மதவாத சக்திகளை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம்: தா. பாண்டியன்

தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற நினைப்பதை கடுகளவும் அனுமதிக்க

தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற நினைப்பதை கடுகளவும் அனுமதிக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்   பேசினார்.
இந்தியாவை   மீட்போம்,  தமிழகத்தை காப்போம் என்ற கொள்கை முழக்கங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  யின் சார்பில்,  தமிழகத்தின் 6 பகுதிகளில் இருந்து திருச்சி நோக்கி பிரசார பயணம் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் இருந்து வியாழக்கிழமை தொடங்கிய திருச்சி நோக்கி செல்லும் பிரசாரப் பயணக் குழுவுக்கான வரவேற்பு பொதுக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இக் கூட்டத்துக்கு,  கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் எஸ்.  காசிவிஸ்வநாதன்  தலைமை வகித்தார்.  துணைச் செயலர்கள் ஏ.எம். சத்யன்,  பி. பெரும்படையார்,  எஸ். நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநகரச் செயலர் லட்சுமணன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், தா.  பாண்டியன் பேசியது:
திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களை நம்பி அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பும் கூட்டம் தமிழகத்தில் இன்றளவும் உள்ளது. அதனால்தான், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை அந்த மயக்க நிலையில் வைத்து மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே இப்போது மயக்க நிலையில் உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.  மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவது அவசியம்.
ஜிஎஸ்டி என்ற புதிய வரி விதிப்பால் தமிழகத்தின் பலம் வாய்ந்த தொழிலான பட்டாசு தொழி ல்  அழியும்  நிலைக்கு  வந்துள்ளது.     ஜவுளி,  உணவு,  கைத்தறி,  சிறு வணிகம் என அனைத்து தொழி ல்களும் அபாயத்தில் உள்ளன.  உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பறிக்கப்படுகிறது.  மாறாக முதலாளிகளின் வளர்ச்சி கடந்த 3 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது.  இத்தகைய நிலைக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே அடிப்படை காரணமாக அமைந்துள்ளன. தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி வகுப்புவாத,  மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கின்றன.  இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது.   குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க அதிமுக-வின் 3 அணிகளும் முடிவு செய்துவிட்டன.  எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும்,  குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என்ற நிலையை எடுத்தால்கூட தமிழகத்தின் மானம் காக்கப்படும்.
பெருமுதலாளிகள்,  பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை முன்வைத்து மாற்றத்தை முன்னெடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும்,  தமிழக மக்களை காக்கவும் பிரசார இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.  ஜூலை 5இல் திருச்சியில் நிறைவு பெறும் என்றார் அவர்.
இக் கூட்டத்தில், பிரசாரக் குழுத் தலைவர் கோ. பழனிச்சாமி,  பிரசாரக் குழு உறுப்பினர்கள் எம். அப்பாத்துரை,  எஸ். அழகுமுத்துப்பாண்டியன், எம். கண்ணகி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் ஆர். சடையப்பன் உள்ளிட்ட பலர் பேசினர்.


கதிராமங்கலம் சம்பவத்துக்கு கண்டனம்!
தமிழகத்தில் 110 இடங்களில் எண்ணெய் வளம் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக ஆழ்துளை குழாய் அமைத்து மத்திய அரசின் எண்ணெய் நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது.  விளைநிலங்களில் விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறும் இத்தகைய ஆய்வுக்கு எதிராக நெடுவாசல் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
கதிராமங்கலத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஒடுக்க தமிழக காவல்துறை அடக்கு முறையை கையாண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.  தமிழக  காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும்,  போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என தா. பாண்டியன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com