சமுதாய சமையலறை, பொதுக் கழிப்பறை-குளியலறைநாகரிகமாகும் நரிக்குறவர் காலனி!

திறந்தவெளி கழிப்பறையை அகற்றுதல், விறகுகளை எரித்து திறந்தவெளியில் சமையல் செய்வதை கைவிடுதல், பொதுக் கழிப்பறைகள், பொது குளியல்

திறந்தவெளி கழிப்பறையை அகற்றுதல், விறகுகளை எரித்து திறந்தவெளியில் சமையல் செய்வதை கைவிடுதல், பொதுக் கழிப்பறைகள், பொது குளியல் அறைகள், சலவை கூடம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் நரிக்குறவர் காலனியை நாகரிகமாக்கும் முயற்சியில் திருநெல்வேலி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
பேட்டை நரிக்குறவர் காலனி: திருநெல்வேலி மாநகராட்சியின் 48ஆவது வார்டுக்குள்பட்டது பேட்டை நரிக்குறவர் காலனி. இங்கு 350-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு ஏற்கெனவே பொதுக் கழிப்பறை இருந்தாலும், அவை போதுமானதாக இல்லை. மேலும், தெருக்களிலேயே கற்களை வைத்து விறகடுப்பு மூட்டி சமையல் செய்து வருகின்றனர். பெரும்பாலானோர் கழிப்பறையை பயன்படுத்துவதற்கு பதிலாக காலனிக்கு ஒதுக்குப்புறாக முட்புதர்கள் நிறைந்த பகுதியில் திறந்தவெளி கழிப்பறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் சுகாதார லீக் போட்டிக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நரிக்குறவர் காலனிக்கு சென்ற ஆட்சியர், காலனி சுற்றுப் பகுதியில் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை உருவாக்க அறிவுறுத்தினார்.
வரைவுத் திட்டம்: இதையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி மூலம் இந்தப் பகுதிக்கு புதிய திட்டம் உடனடியாக வகுக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் இதற்கான வரைவுத் திட்டத்தை வடிவமைத்துள்ளார்.
இதன்படி, காலனியில் உள்ள ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே 10 பொதுக் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. மேலும், தலா 2 குளியல் அறைகளும் அதில் இடம்பெறும். இதுமட்டுமல்லாது, ஆடைகளை சலவை செய்வதற்காக ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அதே இடத்தில் சலவைக் கூடம் கட்டித்தரப்படவுள்ளது.
இதுமட்டுமல்லாது இந்தப் பொதுக் கழிப்பறையின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளை பெரிய அளவிலான கழிவுத் தொட்டியில் சேகரித்து, அதில் இருந்து மீத்தேன் எரிவாயு உற்பத்தி செய்து சமையலுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சமுதாய சமையலறையும் கட்டப்படவுள்ளது. சென்னை தாம்பரம் நகராட்சிக்குள்பட்ட சேலையூர் பாரத்நகரில் பல்வேறு சமூக மக்கள் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைப் பின்பற்றியே பேட்டை நரிக்குறவர் காலனியிலும் இத் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், பேட்டை நரிக்குறவர் காலனி தலைவர் மலையாளி, செயலர் ஜெயகணேஷ், பொருளாளர் மூக்கி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். கழிப்பறை, சமையலறை, குளியலறை, சலவைக் கூடம், எரிவாயு உற்பத்தி அமைப்பு என அனைத்து கட்டுமானங்களையும் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நரிக்குறவர் காலனி மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நரிக்குறவர்காலனி தலைவர் மலையாளி கூறியது:
காலனியில் உள்ள நரிக்குறவர் குடும்பங்களுக்கு சில மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்தால் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. விடுபட்டோருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது, நகர மக்கள் பயன்படுத்தும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய திட்டத்துக்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நரிக்குறவர் காலனி மக்களும் நாகரிக மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்றார் அவர்.

தாம்பரம் செல்லும் குழு!
சமுதாய சமையலறை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த 4 பெண்கள், 2 ஆண்கள் அடங்கிய 6 பேர் குழுவினர் திருநெல்வேலி மாநகராட்சி துப்புரவு அலுவலர்களுடன் தாம்பரம் நகராட்சிக்கு அடுத்தவாரம் செல்லவுள்ளனர். சேலையூர் பாரத்நகரில் செயல்படுத்தும் திட்டப் பணிகளை நேரில் கண்டறிந்து விழிப்புணர்வு பெறவுள்ளனர். இக்குழுவினர், காலனியில் உள்ள இதர குடும்பத்தினருக்கு திட்டத்தை விளக்கிக் கூறி, பேட்டையில் சமுதாய சமையலறை அமைக்கும் பணிக்கு ஒப்புதல் பெறுவர். ஆகஸ்ட் மாதம் திட்டப் பணிகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமக்கு- நாமே பராமரிப்பு!
கழிப்பறை, குளியலறை, சலவைக் கூடம், சமுதாய சமையலறை என அனைத்து கட்டுமானங்களும் முடிக்கப்பட்டு இதன் பராமரிப்புப் பணிகள் நரிக்குறவர் காலனி மக்களிடமே ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ் தெரிவித்தார். மேலும், அவர் கூறியது:
தாம்பரம் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்துக்கு பராமரிப்புக் கட்டணமாக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. இதனைப் போல காலனி மக்களே பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட தொகையை வசூலித்து அனைத்து வசதிகளையும் நல்ல முறையில் பராமரிக்கலாம். மாநகராட்சி நிர்வாகம் வேண்டிய உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com