பாபநாசம் அணை நீரை பாசனத்துக்கு திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

பாபநாசம் அணை நீரை பாசனத்துக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் ஆட்சியரிடம்  திங்கள்கிழமை மனு அளித்தனர்.

பாபநாசம் அணை நீரை பாசனத்துக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் ஆட்சியரிடம்  திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: தாமிரவருணி பாசனப் பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஜூன் 1 முதல் 7 ஆம் தேதிக்குள் பாபநாசம் அணையில் 40 அடி தண்ணீர் இருந்தாலே விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்மூலம் கார் மற்றும் பிசான பருவ சாகுபடிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக குடிநீர்த் தேவை என்ற காரணம் கூறி,  விவசாயம் செய்ய தண்ணீர் கால்வாயில் திறக்கப்படுவதில்லை. கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை.
இப்போது சேர்வலாறு அணையில் மராமத்துப் பணிகள் நடைபெறுகிறது. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் நீரைச் சேமிக்க முடியாத சூழல் உள்ளதால் தண்ணீரை ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். விநாடிக்கு சுமார் 400 முதல் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆனால், வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் விநாடிக்கு 54 கனஅடி, தெற்கு கோடைமேழலகியான் கால்வாயில் விநாடிக்கு 36 கனஅடி, நதியுண்ணி கால்வாயில் விநாடிக்கு 69 கனஅடி வீதம் மொத்தம் 169 கனஅடி தண்ணீர் திறப்பதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 590 ஏக்கர் நிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி சிறப்பாக நடைபெற வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சலால் மக்கள் பாதிப்பு: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: களக்காடு ஊராட்சி ஒன்றியம், கடம்போடுவாழ்வு ஊராட்சிக்குள்பட்ட தெற்குபுளியங்குளம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பகுதி மக்கள் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஊரை காலி செய்துவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆகவே, அங்கு சிறப்பு சுகாதார முகாம்களை நடத்துவதோடு, குடிநீர், சாலை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com